Thursday, 6 September 2018

திருமணநாள் - 2018ஆம் ஆண்டு

ஐந்தில் மட்டுமல்ல, ஐந்தாம் வகுப்பில் பதிந்ததும் அழியாது!

இளம்பருவத்தில் சந்தித்த நாட்கள்
இன்னவென்று தெரியாமல் பழகிய நாட்கள்
மரியாதையினை மறந்த பழக்கங்கள்
(வாடா போடா, வாடி போடி) உரையாடல்கள்
கள்ளமும், கபடமும் இல்லா ஊடல்கள்

கோடை விடுமுறை நோக்கி காத்திருந்த நாட்கள்
சென்னை உறவினர்கள் என்ற மிடுக்குடன் திரிந்த நாட்கள்

வாங்கி வந்தது முறுக்கு தான், என்றாலும் சென்னை முறுக்காயிற்றே!

புகும் வீடு என்பதாலோ என்னவோ, பெரியவளாகியது என் வீட்டில்!
பெரியவளாய் ஆனது சமூகத்திற்கு தான், எனக்கல்லவே!
மீண்டும் துவங்கிய மரியாதையினை மறந்த பழக்கங்கள்!
அவள் சென்னை முறுக்காயிற்றே 😊

கல்லூரி வேலூர் என்றதும், சம்மதம்
என் தங்கையினை சந்திக்கும் வாய்ப்பிற்காக!

அங்கு தங்கையினை காண, தங்கியதன் விளைவு,
-- சுகமானது வேலூர் முதல் சென்னை பயணம்
-- சுமையானது சென்னை முதல் வேலூர் பயணம்

கடற்கரை கண்டதில்லை
பூங்காவில் ஒதுங்கியதில்லை
இருசக்கர வாகனப் பயணமில்லை
திரையரங்கும் சென்றதில்லை

ஆம், சென்னையிலே இருந்தும் கூட – நாங்கள்
சென்னையிலே இருந்தும் கூட

அந்த சிறு பத்திரிக்கை தான் துவக்கப்புள்ளியா?
இல்லை! இல்லை! அது ஒரு அடையாளம்! அவ்வளவே!

சிறகொடிந்த பறவையாக பாதியில் நிறுத்திய படிப்பு!
பதின்பருவத்திலே பணி செல்லும் பாவம் வேறு
அன்று நான் கூறியது  ”நீ படும் துன்பம் நிரந்தரமல்ல”

விட்ட முயற்சியாக இருந்த கல்வியினை,
விடாமுயற்சியால் வென்றாள்!
இன்று இளநிலை பட்டதாரியாக!

இருபது வருடங்கள் கடந்த பழக்கம்
அதிலும் பாதிக்கு, மேல் என் பாதியாக!

இது எப்படி நடந்தது என்றே அறியவில்லை நான்!
அவள் என்னவள் ஆனது
நான் அவளின் பாதியானது

ஆண்டவனின் அருளும், கடவுளின் ஆசியும்,
அன்பு உறவுகளின் பாசமும்
தமிழ் சொந்தங்களின் அன்பும் இருக்கும் வரை,
பதின்மூன்று ஆண்டுகள் கடந்து அல்ல,
இன்னும் பல்லாண்டு ஒன்றாக கடப்போம் என்ற நம்பிக்கையுடன்!

-தெய்வேந்திரன்