இவை அனைத்தும் எனது நண்பர்கள் மூலமாக கிடைத்த கவிதைகள். இதை படிக்கும்போது ஏதோ ஒரு உணர்வு என் மனதை வருடுவது போல தோன்றுகிறது..
அதனால யாம் பெற்ற இவ்வின்பம் பெருக இவ்வையகம்..
சுட்டெரிக்கும் தனிமை...
தோட்டத்து செடிகளில் கூட...
முட்கள் மட்டுமே பூக்கிறது...
சிரித்த தருணங்களும் கூட...
இந்த கணம் நினைக்கையில்...
கண்ணீரின் பின்னணியில் தெரிகிறது..
மங்கலாக....
தனிமையின் வெறுமை...
சிறு நிழலென தொடங்கி...
பின்னிரவின் இருளென பரவுகிறது..
மின்விசிறியின் சத்தம் மட்டும் துணையாய் கொண்டு...
விழித்தபடியே கழிக்கும் இரவுகள்...
ஓங்கி ஒலிக்கும் நிசப்தத்தின் அதிர்வினில்...
அரண்டு போகிறது மனம்....
சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...
எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...
எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...
காற்றில் கரைந்த வார்த்தைகள் எல்லாம்...
என்றேனும் ஒரு நாள்...
உங்களில் யாருக்கேனும் கிடைக்க கூடும்...
வானவில் மூலமோ.... வான்மழை மூலமோ...
நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
------------------------------------------------------------------------------
உங்களில் ஒருவனாக...
பாதை முழுவதும் நிரப்பியிருக்கிறீர்கள்....
முட்களுடன் கூடிய ரோஜா பூக்களை.
முட்களை மிதித்தால்.. கவனம் என்கிறீர்கள்..
பூக்களை மிதித்தாலோ.. பாவம் என்கிறீர்கள்..
பாதைகளை அடைத்து விட்டீர்கள்...
சிறகுகளையும் மறுத்து விட்டீர்கள்...
சிலுவை மட்டும் சுமக்க சொல்கிறீர்கள்... மறக்காமல்..
இரத்தம் ஒழுக நிற்கும் என்னை...
பார்த்தபடி தாண்டி செல்கிறீர்கள்.
என் உடலின் காயங்கள் பற்றி கவலையில்லை
ஆடைகள் கறைபட கூடாது என்பதில்தான்
கவனம் உங்களுக்கு....
எனது தூக்கத்தை பறித்து கொண்டு...
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...
எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்.
முகமூடிகள் அணிந்து அணிந்து... மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...
கழற்றி எறியவே விருப்பமென்றாலும்...
நீங்கள் எறியும் கற்களை எதிர்கொள்ள துணிவின்றி...
முகமூடி கொண்டே முகம் மறைக்கிறேன்...
புனித மிச்சமும் மனித எச்சமுமாய்
கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...
ஏனென்று தெரியாமல்... எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.
நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
------------------------------------------------------------------------------
இன்னும் ஓர் இரவு...
சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...
நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...
யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...
உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...
நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
தொகுப்பு தொடரும்.. ..
(அதான் நம்ம நண்பர்கள் நிறைய பேர் கவிதை மழைபொழிந்து கொண்டே இருக்கிறார்களே!.. )
2 comments:
wow!!!!!!!!!!!!!!! really amazing!!!! kepp!!!
veryyyyyyyyy beautiful.. avalo realistic ah iruku.... keep t up :)
Post a Comment