யாரும் எதிர்பாராத வகையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி குரோம் என்ற பெயரில் தன்னுடைய சொந்த பிரவுசரை வெளியிட்டு இதிலும் புதுமையையும் முதல் இடத்தையும் தட்டிச் சென்றுள்ளது கூகுள் நிறுவனம். முதலிடம் பிடிப்பது மற்றும் நல்ல பெயர் வாங்குவது என்ற இரு இலக்குகளை அடைய தொடர்ந்து பிரவுசர் மார்க்கட்டில் சண்டை நடந்து வருகிறது. | |
அவ்வப்போது ஒரு சில வதந்திகள் இது குறித்து வெளிவந்தாலும் யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாத வகையில் குரோம் பிரவுசருக்கான பணிகளை மேற்கொண்டிருந்தது கூகுள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில்,செப்டம்பர் 2, இதனை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணியில் பயர்பாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இரு மேல்நிலை பொறியாளர்கள் உள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பி இயக்கத் தொகுப்புகளுக்கான பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது. மேக் மற்றும் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். பயர்பாக்ஸ் போல குரோம் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர். இதன் கட்டமைப்பை யார் வேண்டுமானாலும் பெற்று அதற்கேற்ற ஆட் – ஆன் என்னும் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய புரோகிராம்களை எழுதி தரலாம்.
1. கிராஷ் ஆகாத பிரவுசர்: இதன் இயக்கம் மல்ட்டி பிராசசர் கட்டமைப்பில் இயங்குகிறது. இதனால் ஒரு மோசமான வெப்சைட்டை நீங்கள் பார்ப்பதனால் அது மட்டுமே முடக்கப்படும். பிரவுசர் இயக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு டேபும் விண்டோவும் அதனதன் சூழ்நிலையில் தனித்து இயங்கும் வகையில் இந்த பிரவுசர் அமைக்கப் பட்டுள்ளது. எனவே மோசமான வெப்சைட்டைப் பார்ப்பதனால் பிரவுசர் இயக்கம் முடங்காது. | |
2. அதிக வேகம்: மல்ட்டி பிராசசர் இயக்கம் இருப்பதால் நிதானமாக எக்கச் சக்க படங்களுடன் இறங்கும் ஒரு வெப்சைட் அடுத்த தளம் இறங்குவதனை நிறுத்தாது. ஒரு தளம் இறங்குகையில் அதே தளத்தில் ஒரு விளம்பரம் மிக மெதுவாக இறங்குவதாக வைத்துக் கொள்வோம். குரோம் பிரவுசர் அந்த மெதுவாக இறங்கும் விளம்பரத்தைத் தள்ளிவைத்து தளத்தின் தகவல்களை மிக வேகமாக இறக்கித் தருகிறது. அதுமட்டுமல்ல, எக்ஸ்புளோரரும் பயர்பாக்ஸும் பயந்து நடுங்கும் வகையில் இதன் வேகம் இருக்கிறது. அனுபவித்துப் பார்த்தால் தான் வேகம் புரியும். | |
3. இருப்பதே தெரியாது: இந்த பிரவுசர் இயங்கும்போது அது பிரவுசராகவே தெரியாது. மானிட்டரின் திரையின் பெரும்பகுதி நாம் பார்க்கும் இணைய தளத்திற்கெனவே ஒதுக்கப்படுகிறது. பட்டன்கள், லோகோக்கள் என எதுவும் இருக்காது. ஒரு சிறிய பட்டனில் பைல், பிரிண்ட், சேவ் போன்ற மெனுக்கள் சுருக்கி வைக்கப் பட்டுள்ளன. மெனுவைக் கிளிக் செய்து திறக்க விருப்பமில்லையா! மவுஸில் ரைட் கிளிக் செய்தால் போதும்; மெனு கிடைக்கிறது. | |
4. எளிமையான தேடல்: குரோம் பிரவுசரின் மிகச் சிறப்பான அம்சமாக அதன் ஆம்னிபாக்ஸைக் (Omni box) கூறலாம். பிரவுசரின் மேலாக இந்த பார் அமைக்கப் பட்டு பல செயல் பாடுகளுக்கு இடமாக இயங்குகிறது. இதில் நீங்கள் ஒரு யு.ஆர்.எல். டைப் செய்திடலாம். அல்லது ஏதேனும் ஒரு சொல் கொடுத்து சர்ச் இஞ்சினாக மாற்றலாம். | |
வழக்கம் போல சர்ச் பாக்ஸில் கேள்வி அமைக்க கண்ட்ரோல் + கே கொடுத்தால் குரோம் பிரவுசர் நீங்கள் எதையோ தேட விரும்புகிறீர்கள் என்று கணித்து உடனே ஒரு கேள்விக் குறியை ஆம்னிபாக்ஸில் அமைக்கிறது. இது கூடத் தேவையில்லை. இணைய முகவரி பார்மட்டில் இல்லாத எதனை அமைத்தாலும் உடனே அது தேடலுக்குத்தான் என்று பிரவுசர் எடுத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. உங்கள் நோக்கத்தை உணர்ந்து கொண்டு பிரவுசர் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை இந்த ஆம்னிபாக்ஸ் சரியாகக் கணித்துச் செயல்படுகிறது. இதுவரை பிரவுசர்களில் இந்த பாக்ஸ்களில் ஆட்டோ கம்ப்ளீஷன் என்னும் வசதி மட்டுமே தரப்பட்டு வந்தது. ஏற்கனவே டைப் செய்த வெப்சைட் முகவரிகளை மெமரியில் வைத்து அவற்றை முழுமையாகத் தருவதே இந்த வசதியின் நோக்கம். ஆனால் குரோம் பிரவுசரில் மட்டுமே இந்த கூடுதல் வசதி தரப் படுகிறது. அத்துடன் ஒரு வெப்சைட்டுக்குப் போனபின் அதில் சர்ச் பாக்ஸ் இருந்தால் அதனை உணர்ந்து கொண்டு தன் சர்ச் பாக்ஸிலேயே தேடலை மேற்கொண்டு தருகிறது.
5. டேப்களில் கூடுதல் கண்ட்ரோல்: டேப்களின் வழியே பிரவுசிங் பயர்பாக்ஸில் தொடங்கி தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் குரோம் பிரவுசரில் இந்த டேப்டு பிரவுசிங் முற்றிலும் புதிய கோணத்தில் பயன்படுத்தப்படுகிறது. டேப் ஒன்றை இழுத்து வந்து வேறொரு டேப்பிற்கான தளத்தில் போட்டு இரண்டையும் இணைக்கலாம். அத்துடன் எந்த வகையில் டேப்களைத் திறக்க என்பதனையும் செட் செய்திடலாம். நீங்கள் விரும்பும் தளங்களின் டேப்களோடு திறக்கலாம். அல்லது வழக்கமான டேப்களின் அமைப்பில் திறக்கலாம். இந்த வசதி குரோம் பிரவுசரிலேயே அமைக்கப் பட்டுள்ளது. மற்ற பிரவுசரில் இது தனியாக ஆட் ஆன் புரோகிராமாக, தர்ட் பார்ட்டி புரோகிராமாகத் தான் கிடைக்கிறது.
மேலும் டேப்கள் திரையின் மேற்புறத்தில் அழகாக அமைக்கப படுகிறது. இத்துடன் மற்ற பிரவுசர்களில் இல்லாத டாஸ்க் மேனேஜர் இதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த டேப்பில் உள்ள புரோகிராம் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று பார்த்து அதனை வெறுமனே வைத்திருந்தால் நாம் மூடிவிடலாம். இதன் மூலம் மெமரி நமக்குக் கூடுதலாகக் கிடைத்து பிரவுசர் வேகம் அதிகரிக்கும். மேலும் டாஸ்க் மேனேஜர் மூலம் திறக்க மறுக்கும் இணைய தள டேப்பினை மட்டும் மூடலாம். பிரவுசரையே மூட வேண்டிய கட்டாயம் இருக்காது.
6. ஹோம் பேஜ்: குரோம் பிரவுசர் தனக்கென ஒரு ஹோம் பேஜோடு திறந்து கொள்கிறது. அதனைப் பயன்படுத்துகையில் இந்த புரோகிராம் நாம் செல்லும் வெப்சைட்டுகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. இதில் முதல் ஒன்பது வெப்சைட்கள் ஸ்நாப் ஷாட் போல மூன்றுக்கு மூன்று என்ற வகையில் காட்சி அளிக்கின்றன. இவற்றுடன் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சர்ச் இஞ்சின்களும் புக் மார்க்குகளும் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த ஹோம் பேஜ் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நீங்கள் விரும்பும் எதனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
7. தனிநபர் தகவல்: அண்மையில் வெளியான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தொகுப்பில் உள்ளது போல குரோம் பிரவுசரும் தனி நபர்கள் தங்கள் தகவல்கள் மற்றவருக்குத் தெரியக் கூடாது எனில் தனியான பிரவுசிங்கில் ஈடுபடலாம். இதனை குரோம் Incognito என அழைக்கிறது. இதற்கென தனியே ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் நீங்கள் என்ன தகவல் தேடினாலும், எந்த தகவல் தந்தாலும் கம்ப்யூட்டரிலோ அல்லது பிரவுசர் புரோகிராமிலோ பதியப்படாது. இதனால் ஒரே நேரத்தில் பொதுவான விண்டோ ஒன்றும் தனி நபரின் தனிப்பட்ட விண்டோ ஒன்றையும் திறந்து பிரவுசிங் செய்திடலாம்.
8. பிக் அப் வசதி: குரோம் பிரவுசரைத் திறந்தவுடன் நீங்கள் எந்த தளத்தில் விட்டீர்களோ அங்கு தொடங்க உங்களுக்கு ஆப்ஷன் தரப்படுகிறது. அது மட்டுமல்ல கடைசியாக இதனைப் பயன்படுத்திய போது எந்த எந்த தளங்கள் திறந்திருந்தனவோ அவை அனைத்தும் காட்டப்படுகின்றன.
9. ஷார்ட் கட் வசதி: நீங்கள் பிரவுசரைத் திறந்தவுடன் எந்த தளத்திற்குப் போக விரும்புகிறீர் களோ அதற்கான ஷார்ட் கட்டினை அமைத்துவிட்டால் போதும். அதில் கிளிக் செய்தால் குரோம் திறக்கப்பட்டு நேராக அந்த தளத்திலேயே இறங்குவீர்கள். குரோம் பிரவுசரை டவுண்லோட் செய்வது மிக எளிது. விரைவும் கூட. நீங்கள்பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதன் புக் மார்க்குகள், பேவரைட் தளங்கள் தாமாக இதில் ஒட்டிக் கொள்வதைப் பார்க்கலாம். விரைவில் மேக் மற்றும் லினக்ஸ் பதிப்புகள் வர இருக்கின்றன. குரோம் தற்போது 122 நாடுகளில் 43 மொழிகளில் படிப்படியாக வர இருக்கிறது. முதல் முதலாக கூகுள் இதனைச் சோதனைப் பதிப்பாகத்தான் வெளியிட்டுள்ளது. எனவே முழுமையான பத்திரமான பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்படும் வரை கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
இதுவரை குரோம் தொகுப்பிற்கு எந்த ஆட்–ஆன் புரோகிராம் தொகுப்பும் இல்லை. இனி மேல் தான் எழுதப்பட வேண்டும். நிச்சயம் அதிக அளவில் விரைவில் இவை கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. பயர்பாக்ஸின் ஒரு சிறப்பான அம்சம் அது தரும் சிங்கரனை சேஷன் வசதியாகும். இதன் மூலம் உங்கள் ஹோம் பிரவுசர், லேப்டாப் பிரவுசர் மற்றும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் பிரவுசர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் இயக்கலாம். இதற்கு பழகியவர்கள் வேறு மாதிரியாக பிரவுசரைப் பயன்படுத்த இயலாது. குரோம் பிரவுசரில் இந்த வசதி இதுவரை தரப்படவில்லை.
குரோம் பிரவுசர் பயன்படுத்தும் கட்டமைப்பு வெப்கிட் என்பதன் அடிப்படையில் அமைந்ததாகும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம். ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரான சபாரியில் இதுதான் இயங்குகிறது. எனவே குரோம் பிரவுசர் மூலம் கிடைக்கும் ஒரு பக்கத்தினையும் பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் கிடைக்கும் ஒரு பக்கத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் டெக்ஸ்ட் மற்றும் அவற்றின் பார்மட்டிங் வகைகளில் வித்தியாசம் தெரியும். இவை எல்லாம் தொடக்கத்தில் எந்த பிரவுசருக்கும் இருக்கத்தான் செய்யும். சர்ச் இஞ்சினில் தனியொரு சாம் ராஜ்ஜியத்தை அமைத்து இன்றும் பவனி வரும் கூகுள் நிறுவனம் நிச்சயம் பிரவுசர் மார்க்கட்டிலும் சிறப்பாகச் செய்திடும் என எதிர்பார்க்கலாம். இதுவரை கூகுள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான தன் போரில் ஓப்பன் சோர்ஸ் நிறுவனமான மொஸில்லா பவுண்டேஷன் வழங்கும் பயர் பாக்ஸ் பிரவுசருக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. கூகுள் விளம்பரத்திற்கென பயர்பாக்ஸ் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2011 வரை இருக்கும்.
கூகுள் புதிய கண்டுபிடிப்புகளுடனும் நவீன வசதிகளுடனும் இன்றைய இணைய தளத்தேடலையும் இணைய உலாவையும் மிகச் சிறப்பாக ஆக்கும் முயற்சியே குரோம் என்னும் இந்த பிரவுசர் என்று கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு துணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறி உள்ளார். ஆனால் மைக்ரோசாப்ட் குரோம் பிரவுசர் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரவுசர்கள் தளம் விசாலமானது, விரிவானது. யார்வேண்டுமானாலும் இதில் இறங்கலாம். ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மக்களின் எதிர் பார்ப்புகளை அதிகம் நிறைவேற்றுவதால் மக்கள் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே நாடுவார்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரிவின் பொது மேலாளர் அறிவித்துள்ளார். அனைத்து பிரவுசர்களுமே நன்றாகத்தான் உள்ளன. ஒன்றுக்கொன்று ஒரு வகையில் சிறப்பு பெறுகின்றன. பயர்பாக்ஸும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் டொயோட்டோ கார் என்றால் குரோம் பிரவுசர் பறக்கும் சிறிய அழகான ஸ்போர்ட்ஸ் கார். அதில் ஏறிப் பறந்துதான் பாருங்களேன்
நன்றி, தினமலர் கணினி மலர்..
No comments:
Post a Comment