Monday 29 September, 2008

18. பிடித்த கவிதை தொகுப்பு - 5

ஆண் பெண் நட்பு....

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை

நன்றி: உமா, தமிழ்கவிதைகள் community

17. எக்ஸ்யூஸ்மி சார்.. அயம் கமிங் பிரம்


வாய் நிறைய ஆங்கில வார்த்தைகள் ..
கை நிறைய விளம்பர குறுஞசீட்டுகள் ..

வசதி இருந்தால் இருசக்கர வாகனம்..
இல்லன்னா மாத பேருந்து பயண அட்டை..

வீட்டு உணவு உண்ண பூங்கா, இரயில்நிலையம்..
இல்லன்னா நல்ல உணவு விடுதி(!) ..

வெயில் மழை பார்க்கா வேலை
பார்த்து செய்தால், இல்லை வேலை.

நடு இரவில் ஓட்ட பந்தயம்
எனக்கும் என் தெரு நாய்க்கும்

தினமும் நூற்றுக்கணக்கான சந்திப்புகள் ..
சில நன்முகத்துடன்.
சில வன்முகத்துடன்

உறக்கத்தின் இடையில் கனவு,
அழகான அலுவலகம், தனியே நாற்காலி, கணினி..

முடிந்தது இன்றைய பொழுது. .
விடிந்தது மற்றுமொரு காலை..

எக்ஸ்யூஸ்மி சார்.. அயம் கமிங் பிரம் ..

(இதுவும் என் சொந்த அனுபவம் தானுங்கோ)

Saturday 27 September, 2008

16. சாமி தரிசனம்!

கூட்டத்தில் சிக்கி வியர்வை வழிய,
சிறப்பு தரிசனம் வேண்டி சிறப்பாக கவனித்து! முன்னேறி சென்ற
அந்த சிறப்பு பக்தர்களை பார்த்து மனம் நொந்து,
சென்றேன் ஆலயத்தின் கருவறைக்கு,
அங்கே கடவுளின் உருவத்தை (ம்ம்ம். முகத்தை மட்டுமே) லேசாக
பார்த்துவிட்டு, விட்டால் போதும் என்று
வெளியே வந்து விட்டேன் சாமி தரிசனம் பெற்று விட்டோம்
என்ற என் குடும்பத்தினரின் வார்த்தைகளின் இடையில் ...

நன்றி: தெய்வேந்திரன், தமிழ்கவிதைகள்

அட, சத்தியமா நான்தாங்க எழுதினேன். (சொந்த அனுபவம்)

15. பிடித்த கவிதை தொகுப்பு - 4

உண்மை கோவில்களும், உயிர் வாழும் தெய்வங்களும்..!

பல தோல்விகளால் வந்த பாரத்தால் விரக்தியில் கடவுள் நினைவு,
சரி கண்டுகொள்ளலாம் என கோவிலிக்குள் நுழைந்தால்,
ஏனோ! எப்போதும் போல் வெறுமைதான் மிஞ்சியது,!

மனதோரம் பாரம் அழுத்த..கண்கள் முட்ட கோவிலின் வெளியே வந்தேன்,
பாரம் குறைக்க, வெறுமையை மறக்க அமைதி வேண்டி அருகில் இருந்த..
பசுமை நிறைந்த பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் நுழைந்தேன்..!!

அதோ சற்று அருகாமையில்,பார்வையற்ற சிறார்கள்...,

விளையாட்டுமுதல் படிப்பு வரை நமக்கான அனைத்தையும் கற்கிறார்கள்,
ஆனால் நம்மை விட பல மடங்கு பளு சுமந்து..கண்ணீருடன்.!!

சற்று மனதை நெருடியதால் பாரத்துடன் அமர்ந்தேன் அவர்கள் அருகாமையில்,
என்னுடைய உடை பட்டு வருகையை உணர்ந்தவனாய் ஓரு சிறுவன்,
தன் கைகளால் தேடி தடுமாறி பிடித்தான் என் கைகளை!!

அந்த பிஞ்சு விரல் பட்டதும் ஏனோ மனது வலித்தது பாரத்துடன்,

இதோ தினமும் என் செவிகளில் ஒலித்து கொண்டிருக்கும் அவன் கேள்வி!!!!

அண்ணா,
கண்கள்னா என்னனா? எப்படினா இருக்கும்? எங்கனா கிடைக்கும்? எனக்குனா கிடைக்காதா அண்ணா?

அய்யகோ, கண்ணீர் என் கண்களை மறைக்க சரிந்து அமர்ந்தேன் தற்காலிக குருடனாய்!!!!
உணர்ந்தேன் கண்ணிருந்தும் நான் பட்ட தோல்விகளுக்கான காரணங்களை, அறிந்தேன் அந்த தோல்விகள் எல்லாம் தோல்வி அல்ல என்பதை,,!!

அந்த சிறுவனின் ஆக்க பேச்சில் கண்டேன் கடவுளை!!
சற்றே அவனிடம் விடை பெற்று நடந்தேன் புதிய பிறப்பாய்..,

இத்தனை நாளாய் உண்மை கோவிலை பார்க்க தவறிவிட்ட ஏக்கம் நடையில் உணர முடிந்தது,

இப்பொழுதெல்லாம்,தோல்விகளின் போது நினைத்து கொள்கிறேன்,
அந்த தெய்வங்களையும் அவர்களுக்கான உண்மை கோவிலையும்!!!

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று உயிர் வாழும் தெய்வங்களை தரிசிக்கிறேன்!!!

எனக்கான வெற்றிகள் அனைத்தும்,
அவர்களிடம் பெற்ற வரமாகவே தோன்றுகிறது !!!

உங்களுக்கும் வரம் கிடைக்கும், கைகோருங்கள் எங்களுடன்!!..,

சென்று வருவோம் உண்மை கோவிலுக்கு,

வென்று வருவோம் பல தெய்வங்கள் தரும் வாழ்த்து வரங்களை!!!

"தமது கண்களை தானம் செய்த தெய்வங்களுக்கு", இந்த உயிர் வரிகளை காணிக்கையாக்கும்,,,..., :
உங்கள் சேவகன்.... -laajee..,

நன்றி, பாலாஜீ, தமிழ்கவிதைகள்

Wednesday 24 September, 2008

14. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா .

ஆபீஸ்ல ரொம்ப இலவசமா (மன்னிக்கவும் free-a) இருக்கறவங்களுக்கு ஒரு நல்ல மனுஷன் (idea மணி-னு நினைக்கிறேன்) இந்த மாதிரி Super ஆ ஐடியா கொடுத்து இருக்கார்..சரி ஒவ்வொன்னா பாப்போம்..

1. சின்னதா ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ய உங்க அலுவலதுக்குள்ளாகவே உருவாக்கி அடுத்தது யாரு வேளையில் இருந்து விடுபட போகிறார்கள் என்பதை கண்டறியுங்கள்..

2. உங்க பாசுக்கு சும்மா சும்மா பிளாங்க் கால் பண்ணுங்கள்..

3. உங்க யாஹு id ல இருந்து ஜிமெயில் க்கு ஒரு மெயில் அனுப்புங்க. உடனே gmaila திறந்து பாருங்க.. மெயில் வர எவ்ளோ நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.. இந்த முறைய அப்படியே திருப்பி (reverse la) செய்யுங்க..

4. உங்க கை விரல்களை எண்ணுங்க.. இன்னும் போர் அடிக்குதா, கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்க.. இன்னுமா. சரி அப்படினா பக்கத்துல உள்ளவரையும் விடாதீங்க..

5. அடுத்தவங்க வேல பாக்கும் போது அவங்க முக பாவனைகளை பாருங்கள்.. கண்டிப்பா உங்களுக்கு சிரிப்பு வரும்.. அவ்வப்போது உங்களோட முகபாவனைகளையும் மாற்றுங்கள்.. அப்போது தான் நீங்க வேலை செய்வது போல தோன்றும்..

6. போன வாரம், அல்லது போன மாதம் வெளியான பத்திரிக்கைகள், புத்தகங்களை படியுங்கள்..

7. தேநீர் பருகிய கப்பை குறி பார்த்து குப்பை தொட்டியில் போட முயற்சி செய்து பாருங்கள்.

8. அலைபேசி அல்லது தொலைபேசியை எடுத்து உபயோகத்தில் இல்லாத எண்களுக்கு போன் பண்ணுங்கள்..

9. உங்கள் கணினியில் ஒரே நேரத்தில் எத்தனை applications a ஓபன் பண்ண முடியும் என்பதை சோதித்து பாருங்கள்.. முடிந்தால் உங்களது டெஸ்க்டாப் ல எவ்ளோ icon-s a போட முடியும்னு சோதியுங்கள் (full-a போட்டு பொறவு ஒன்னொன்னா delete பண்ணுங்க..

10. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள் (shift delete போட்டுராதீங்கோ ). அதை Recycle bin ல இருந்து restore செய்து விளையாடுங்கள் .. திரும்ப திரும்ப செய்து பார்க்கலாம் .

11. முக்கியமா internet இருந்தா orkut ல போய் உங்களோட friends (or friend a illathavanga read rights கொடுத்தா .) oda scrapbook ல ஏதாவது எழுதுங்க. அப்புறம் அந்த scrapbook fulla ஓபன் பண்ணி படியுங்க.. நல்லா time பாஸ் ஆகும் ..

12. உங்களுக்கு கொடுக்கப்பட்ட நாற்காலியில் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ சாய்ந்து பாருங்க .. (அப்படியே தூங்கிராதீங்க).. seat la hight a கூட்டி குறைச்சி விளையாடலாம்..

13. பிடித்த கவிதை தொகுப்பு - 3

கடவுளின் கதறல்..
கல்லாகச் சமைந்ததாலையே
கரைய மாட்டேனென்ற
நினைப்பில் நீ நடத்திய
சடங்குகள் வெறும் சங்கடங்களே..

விதவிதமான அபிஷேகங்களில்
வழிந்தோடிய அமுதுகளை
விழியில் நீரோடு பார்த்து நிமிர,

ஒட்டிய வயிற்றுடன்
ஒருவேளை உணவுக்காக
ஏங்கிய என் குழந்தை
எரிச்சலோடு என்னைப்பார்க்க,

இப்படியொரு இம்சையான பிறவி
எடுக்காமல் இருந்துருக்கலாம் நான்!

வாழ்வதற்காக நான் படைத்த என் மக்கள்
வாழ்வைத் தொலைத்து வீதியில் வழிதவறி
அடிப்படைத் தேவைக்கே அல்லல் பட,

எனைக் காப்பதாய் நினைத்து நீ
கடிவாலமிட்டுச் சென்ற கட்டிடத்திற்குள்
கதறிக் கொண்டிருக்கிறேன் நான்..

நாளைய விடியலை நடுக்கத்துடன் எதிர்நோக்கியிருக்க
நான் பார்த்த காட்சிக்கு
நன்றி உரைக்கிறேன் உனக்கு..

இரு விழிகளை இழந்த
இளம் குருத்தொன்று இன்னிசை பாடி யாசிக்க
எதிர் கடையிலிருந்து வந்த
இசுலாமியன் இதமாய்த் தடவி, இட்டான் பிச்சை!

எனக்கு புரிந்தது..
எல்லாரும் என்னை நம்பி வரவில்லை..
எஞ்சியிருக்கும் உன் மனிதநேயத்தை மட்டுமே என்று..

சிறிது நேர அடைக்கலமும்
சிறிது நேர பிச்சையும்
இயலாதவனுக்கும் இசைகிறது என்றால்..
என்றும் சிறைபட்டிருக்க
எனக்கு முழுச் சம்மதமே...

நன்றி: One friend

12. பிடித்த கவிதை தொகுப்பு - 2

தவற விட்ட மழை...
பூமி நனைக்க புறப்பட்ட மழைத்துளிகள்..
இன்னும் வந்து சேரவில்லை.
வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்...
மழையை வரவேற்கும் கவிதையொன்றை..

காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்...
வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
என் வாசல் வழி சென்ற காற்று..
அறிந்திருக்கக்கூடும் என் தேடலை.

காற்று சொல்லி வந்து சேர்ந்தன...
என் வாசம் வராத வார்த்தைகள்.
வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...
காகிதம் ஏற விருப்பம் தெரிவித்தன.

வார்த்தைகளை அனுப்பிய காற்றே...
காகிதம் பறித்து சென்ற போது...
ஏனோ இறுக்கி பிடிக்க மனமின்றி...
காற்றின் பாதையில் பறக்கவிட்டேன் காகிதத்தை.

என்னை பார்த்தபடி அமர்ந்திருந்த வார்த்தைகளை...
புறக்கணித்து.. உள் சென்று கதவடைத்து விட்டேன்.
நான் தவற விட்ட மழையில் நனைந்து...
கரைந்திருக்ககூடும் காத்திருந்த வார்த்தைகள்...

நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
----------------------------------------------------------------

உடையும் தெய்வத்தின் குழந்தைகள்
பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!

பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!

பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!

பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!

இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...

அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளிகளாய் !!!!!!!??

நன்றி: பாலாஜி, தமிழ்கவிதைகள் community
--------------------------------------------------------------
என் இனியவனே
என் இனியவனே
ஆயுதம் உயிர் கொள்ளும் ஆகவே
சொற்வாள் எடு சொற்போர் தோடு
கத்தியல்ல காகிதமே வெல்லும்
என்றுரை
மகாத்மா உரைகலேல்லாம்
மீண்டும் உயிர்கொள்ள
உயிர்த்தெழுவாய் என்னவனே
சாதிகளும் மதங்களும் இந்தியரின்
மூளையைவிட்டு மறையவும்
முளைவிட்டால் மிதிக்கவும்
ஓடி வா நண்பனே

நீ

வேண்டும் ஒரு இந்தியனாய் ...

நன்றி: immanuvel, தமிழ்கவிதைகள் community

11.பிடித்த கவிதை தொகுப்பு

இவை அனைத்தும் எனது நண்பர்கள் மூலமாக கிடைத்த கவிதைகள். இதை படிக்கும்போது ஏதோ ஒரு உணர்வு என் மனதை வருடுவது போல தோன்றுகிறது..

அதனால யாம் பெற்ற இவ்வின்பம் பெருக இவ்வையகம்..


சுட்டெரிக்கும் தனிமை...

தோட்டத்து செடிகளில் கூட...
முட்கள் மட்டுமே பூக்கிறது...

சிரித்த தருணங்களும் கூட...
இந்த கணம் நினைக்கையில்...
கண்ணீரின் பின்னணியில் தெரிகிறது..
மங்கலாக....

தனிமையின் வெறுமை...
சிறு நிழலென தொடங்கி...
பின்னிரவின் இருளென பரவுகிறது..

மின்விசிறியின் சத்தம் மட்டும் துணையாய் கொண்டு...
விழித்தபடியே கழிக்கும் இரவுகள்...
ஓங்கி ஒலிக்கும் நிசப்தத்தின் அதிர்வினில்...
அரண்டு போகிறது மனம்....

சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...
எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...
எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...

காற்றில் கரைந்த வார்த்தைகள் எல்லாம்...
என்றேனும் ஒரு நாள்...
உங்களில் யாருக்கேனும் கிடைக்க கூடும்...
வானவில் மூலமோ.... வான்மழை மூலமோ...

நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
------------------------------------------------------------------------------

உங்களில் ஒருவனாக...
பாதை முழுவதும் நிரப்பியிருக்கிறீர்கள்....
முட்களுடன் கூடிய ரோஜா பூக்களை.
முட்களை மிதித்தால்.. கவனம் என்கிறீர்கள்..
பூக்களை மிதித்தாலோ.. பாவம் என்கிறீர்கள்..

பாதைகளை அடைத்து விட்டீர்கள்...
சிறகுகளையும் மறுத்து விட்டீர்கள்...
சிலுவை மட்டும் சுமக்க சொல்கிறீர்கள்... மறக்காமல்..

இரத்தம் ஒழுக நிற்கும் என்னை...
பார்த்தபடி தாண்டி செல்கிறீர்கள்.
என் உடலின் காயங்கள் பற்றி கவலையில்லை
ஆடைகள் கறைபட கூடாது என்பதில்தான்
கவனம் உங்களுக்கு....

எனது தூக்கத்தை பறித்து கொண்டு...
என்னையே காவல் வைக்கிறீர்கள்..
உங்கள் கனவுகளுக்கு...

எனக்கான காரணங்கள் எதுவுமின்றி...
அழவும் சிரிக்கவும் பழகி விட்டேன்.
முகமூடிகள் அணிந்து அணிந்து... மறந்துவிட்டேன்...
என் முகம் எதுவென...

கழற்றி எறியவே விருப்பமென்றாலும்...
நீங்கள் எறியும் கற்களை எதிர்கொள்ள துணிவின்றி...
முகமூடி கொண்டே முகம் மறைக்கிறேன்...

புனித மிச்சமும் மனித எச்சமுமாய்
கழிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை...
ஏனென்று தெரியாமல்... எதற்கென்று புரியாமல்...
நானும் கூட வாழ்கிறேன்...
உங்களில் ஒருவனாக.

நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
------------------------------------------------------------------------------

இன்னும் ஓர் இரவு...

சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...


நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community

தொகுப்பு தொடரும்.. ..
(அதான் நம்ம நண்பர்கள் நிறைய பேர் கவிதை மழைபொழிந்து கொண்டே இருக்கிறார்களே!.. )

Tuesday 23 September, 2008

10. என் இனிய கணினியே.


என் இனிய கணினியே.

இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக
நான்
யார் முகத்தையும் பார்த்ததில்லை.

இவ்வளவு நேரம் யாரோடும்
விரல் தீண்டல் தொடர்ந்ததில்லை.

அதெப்படி
உன்னால் மட்டும் முடிகிறது ?
கண்ணுக்குத் தெரியாத
கணிதச் சுருக்கங்களின் சுளுக்கெடுக்க ?

முகம் மனசின் கண்ணாடி
என்பது
முகமே கண்ணாடியாகிப் போன
உன்னிடம் தானே உண்மையாகிறது ?

பொழுதுகள் மாறினாலும்
முகங்கள் மாறினாலும்
விடைகளை மாற்ற மறுப்பது
நீ மட்டும் தானே.

நீ மட்டும் இல்லையென்றால்
உலகம் ஒருவேளை
காகிதக் கட்டுக்களில்
புதைக்கப் பட்டிருக்கலாம் !!!

நீ மட்டும் இல்லையென்றால்
உலகைப் பிடித்தெடுக்கும்
ஓர் வலை
உருவாகாமலேயே போயிருக்கலாம்.

நீ என்ன செய்வாய் என்று கேட்ட காலம்
போய்விட்டது.
என்ன செய்ய மாட்டாய் என்கிறது
கலியுகம்.

யாரோ பகல் கனவு கண்டால்
அதை
பிரதி எடுத்துக் கொடுக்கிறாய்.
இரவுக் கனவை இரவல் வாங்கி
மென்பொருளாய் மொழி பெயர்க்கிறாய்.

இப்போதெல்லாம்
மனித மொழிகளுக்கிங்கே மரியாதை இல்லை
கணினி மொழிகளுக்குத் தான்
உலக அங்கீகாரம்.
என்ன..???
விரல்களால் பேச வேண்டும்
அது ஒன்று தான் வித்தியாசம் !!!

சில ஆண்டுகளுக்கு முன்பு
உலகம் உன்னை ஆண்டுகொண்டிருந்தது
இப்போது
நீ ஆட்சியைக் கைப்பற்றி விட்டாய்.

மிட்டாய்க் கடைகளின்
இனிப்புக் கணக்குகள் கூட
நீ இல்லையென்றால் கசந்து போகிறது.

ஏனென்றால்
எங்கள் மூளைக்குச் செல்லும்
முக்கால் வாசி நரம்புகளும்
விரலுக்கும் விழிகளுக்குமாய்
இடம் பெயர்ந்து விட்டது.

எங்கள் மானிட சமூகம்
வைரஸ் வினியோகம் செய்வது,
நோய் தருவதும் மருந்து தருவதும்
நாங்கள் என்பதை
நீ
மறந்துவிடாமல் இருக்கத்தான்.

காலம் மாறிவிட்டது
முன்பு கலப்பை இருந்த இடத்தில்
இப்போது கணிப்பொறி.
முன்பு வரப்புகள் இருந்த இடத்தில்
இப்போது வன்பொருள்கள்.

ஆனாலும் எங்கள் வயிறு
இன்னும்
மென்பொருள் தின்னப் பழகவில்லை.

நன்றி:

Friday 19 September, 2008

9. படித்ததில் பிடித்தது - நட்பு ..

நிரந்தரம்:

இரு வாரங்களுக்கு முன்பு நாம் முகம் பார்த்த
நிலவு இன்று உருத்தெரியாமல்... அமாவாசையாம்..

இன்று செடியின் கீழ் சருகாய், நேற்று நீ அரைமணி
நேரம் கண்சொட்டாமல் ரசித்த செம்பருத்தி

சாஹித்திய நேரங்களில் நொடியில் மனதுள்
ஜனித்து மறித்து போதும் கவிதைகள்..

கை குலுக்கும் போதே விடை பெற்றுப்
போகும் புது அறிமுகங்கள்

தேவைகளின் போது மட்டும்
தேடி வந்து போகும் நண்பர்கள்

இப்படி நிரந்தரமில்லா நிழல்களிடையில்
நிரந்தரமாய் நீயும், உன் நினைவுகளும் மட்டும்..



தொலைந்து போன நேசத்திற்கு..

கல்லூரியில் நான் அதிக நேரம்
செலவிட்டது உன்னோடுதான்..
என் கனவுகள், கற்பனைகள் அதிகம்
பதிர்ந்து கொள்ளப்பட்டது உன்னிடம்தான்

உன் மீது உன்னை விட நம்பிக்கை வைத்தது நான்
என் மீது என்னை விட நம்பிக்கை வைத்தது நீ..

அன்று,
நம் நண்பர்கள்
நம் உலகம்
நம் வேலை
நம் பொழுதுபோக்கு

இன்று
உன் நண்பர்கள்
உன் உலகம்
உன் வேலை

என் நண்பர்கள்
என் உலகம்
என் வேலை

என் தயவில் நீயில்லை
உன் தயவில் நானில்லை

என் துன்பங்களுக்கு உன் தோள் வரவில்லை
உன் துன்பங்கள் எனக்குச் சொல்லப்படவில்லை

நட்புக்கு போலி முகம் தேவை இல்லை- நண்பா
நாம் நாமாக இருப்பதுதான் நட்பு

ஊடலும் கூடலும் காதலில் மட்டும்தான் சுகம் நண்பனே
ஊடல் கொண்ட நட்பு கல் விழுந்த மண்பானை

ஆனால் உறவுகளைப் பற்றி கவலைப்படாதவன் நான்
உறவுகளே தேவை படாதவன் நீ..
நம் நட்பு நமக்கு தேவையில்லைதான்

உன் மீது எனக்கு கோபமில்லை
உன் பிரிவு வேதனையுமில்லை

ஆனால் என மனதின் ஈரமான பக்கங்களில்
உன் பெயர் இன்னும் எழுதப் பட்டுத்தான் இருக்கிறது

நலமாய் இருப்பாய் என நம்புகிறேன் நண்பனே..


நன்றி :
Edwin Britto S
http://www.employees.org/~silva/

8. பிடித்த நட்பின் அடையாளங்கள்





Tuesday 16 September, 2008

7. கூகுளின் குரோம்

பிரவுசர் யுத்தத்தில் புதிய வீரன்

யாரும் எதிர்பாராத வகையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி குரோம் என்ற பெயரில் தன்னுடைய சொந்த பிரவுசரை வெளியிட்டு இதிலும் புதுமையையும் முதல் இடத்தையும் தட்டிச் சென்றுள்ளது கூகுள் நிறுவனம். முதலிடம் பிடிப்பது மற்றும் நல்ல பெயர் வாங்குவது என்ற இரு இலக்குகளை அடைய தொடர்ந்து பிரவுசர் மார்க்கட்டில் சண்டை நடந்து வருகிறது.

இந்த யுத்தத்தில் புதியதாகச் சேர்ந்திருப்பது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசராகும். அடடே! கூகுளுமா!! என்று அனைவரையும் குரோம் பிரவுசர் வியக்கச் செய்தாலும் அதன் செயல்திறன் அனைவருக்கும் சவால் விடும் வகையில் இருப்பது ஒரு சிறப்பாகும்.

அவ்வப்போது ஒரு சில வதந்திகள் இது குறித்து வெளிவந்தாலும் யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாத வகையில் குரோம் பிரவுசருக்கான பணிகளை மேற்கொண்டிருந்தது கூகுள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு நாளில்,செப்டம்பர் 2, இதனை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணியில் பயர்பாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இரு மேல்நிலை பொறியாளர்கள் உள்ளனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

தற்போது விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பி இயக்கத் தொகுப்புகளுக்கான பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது. மேக் மற்றும் லினக்ஸ் பயன்படுத்துபவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். பயர்பாக்ஸ் போல குரோம் ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர். இதன் கட்டமைப்பை யார் வேண்டுமானாலும் பெற்று அதற்கேற்ற ஆட் – ஆன் என்னும் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய புரோகிராம்களை எழுதி தரலாம்.

1. கிராஷ் ஆகாத பிரவுசர்: இதன் இயக்கம் மல்ட்டி பிராசசர் கட்டமைப்பில் இயங்குகிறது. இதனால் ஒரு மோசமான வெப்சைட்டை நீங்கள் பார்ப்பதனால் அது மட்டுமே முடக்கப்படும். பிரவுசர் இயக்கம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு டேபும் விண்டோவும் அதனதன் சூழ்நிலையில் தனித்து இயங்கும் வகையில் இந்த பிரவுசர் அமைக்கப் பட்டுள்ளது. எனவே மோசமான வெப்சைட்டைப் பார்ப்பதனால் பிரவுசர் இயக்கம் முடங்காது.

2. அதிக வேகம்: மல்ட்டி பிராசசர் இயக்கம் இருப்பதால் நிதானமாக எக்கச் சக்க படங்களுடன் இறங்கும் ஒரு வெப்சைட் அடுத்த தளம் இறங்குவதனை நிறுத்தாது. ஒரு தளம் இறங்குகையில் அதே தளத்தில் ஒரு விளம்பரம் மிக மெதுவாக இறங்குவதாக வைத்துக் கொள்வோம். குரோம் பிரவுசர் அந்த மெதுவாக இறங்கும் விளம்பரத்தைத் தள்ளிவைத்து தளத்தின் தகவல்களை மிக வேகமாக இறக்கித் தருகிறது. அதுமட்டுமல்ல, எக்ஸ்புளோரரும் பயர்பாக்ஸும் பயந்து நடுங்கும் வகையில் இதன் வேகம் இருக்கிறது. அனுபவித்துப் பார்த்தால் தான் வேகம் புரியும்.

3. இருப்பதே தெரியாது: இந்த பிரவுசர் இயங்கும்போது அது பிரவுசராகவே தெரியாது. மானிட்டரின் திரையின் பெரும்பகுதி நாம் பார்க்கும் இணைய தளத்திற்கெனவே ஒதுக்கப்படுகிறது. பட்டன்கள், லோகோக்கள் என எதுவும் இருக்காது. ஒரு சிறிய பட்டனில் பைல், பிரிண்ட், சேவ் போன்ற மெனுக்கள் சுருக்கி வைக்கப் பட்டுள்ளன. மெனுவைக் கிளிக் செய்து திறக்க விருப்பமில்லையா! மவுஸில் ரைட் கிளிக் செய்தால் போதும்; மெனு கிடைக்கிறது.

4. எளிமையான தேடல்: குரோம் பிரவுசரின் மிகச் சிறப்பான அம்சமாக அதன் ஆம்னிபாக்ஸைக் (Omni box) கூறலாம். பிரவுசரின் மேலாக இந்த பார் அமைக்கப் பட்டு பல செயல் பாடுகளுக்கு இடமாக இயங்குகிறது. இதில் நீங்கள் ஒரு யு.ஆர்.எல். டைப் செய்திடலாம். அல்லது ஏதேனும் ஒரு சொல் கொடுத்து சர்ச் இஞ்சினாக மாற்றலாம்.

வழக்கம் போல சர்ச் பாக்ஸில் கேள்வி அமைக்க கண்ட்ரோல் + கே கொடுத்தால் குரோம் பிரவுசர் நீங்கள் எதையோ தேட விரும்புகிறீர்கள் என்று கணித்து உடனே ஒரு கேள்விக் குறியை ஆம்னிபாக்ஸில் அமைக்கிறது. இது கூடத் தேவையில்லை. இணைய முகவரி பார்மட்டில் இல்லாத எதனை அமைத்தாலும் உடனே அது தேடலுக்குத்தான் என்று பிரவுசர் எடுத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. உங்கள் நோக்கத்தை உணர்ந்து கொண்டு பிரவுசர் சரியான இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது. நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை இந்த ஆம்னிபாக்ஸ் சரியாகக் கணித்துச் செயல்படுகிறது. இதுவரை பிரவுசர்களில் இந்த பாக்ஸ்களில் ஆட்டோ கம்ப்ளீஷன் என்னும் வசதி மட்டுமே தரப்பட்டு வந்தது. ஏற்கனவே டைப் செய்த வெப்சைட் முகவரிகளை மெமரியில் வைத்து அவற்றை முழுமையாகத் தருவதே இந்த வசதியின் நோக்கம். ஆனால் குரோம் பிரவுசரில் மட்டுமே இந்த கூடுதல் வசதி தரப் படுகிறது. அத்துடன் ஒரு வெப்சைட்டுக்குப் போனபின் அதில் சர்ச் பாக்ஸ் இருந்தால் அதனை உணர்ந்து கொண்டு தன் சர்ச் பாக்ஸிலேயே தேடலை மேற்கொண்டு தருகிறது.

5. டேப்களில் கூடுதல் கண்ட்ரோல்: டேப்களின் வழியே பிரவுசிங் பயர்பாக்ஸில் தொடங்கி தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் குரோம் பிரவுசரில் இந்த டேப்டு பிரவுசிங் முற்றிலும் புதிய கோணத்தில் பயன்படுத்தப்படுகிறது. டேப் ஒன்றை இழுத்து வந்து வேறொரு டேப்பிற்கான தளத்தில் போட்டு இரண்டையும் இணைக்கலாம். அத்துடன் எந்த வகையில் டேப்களைத் திறக்க என்பதனையும் செட் செய்திடலாம். நீங்கள் விரும்பும் தளங்களின் டேப்களோடு திறக்கலாம். அல்லது வழக்கமான டேப்களின் அமைப்பில் திறக்கலாம். இந்த வசதி குரோம் பிரவுசரிலேயே அமைக்கப் பட்டுள்ளது. மற்ற பிரவுசரில் இது தனியாக ஆட் ஆன் புரோகிராமாக, தர்ட் பார்ட்டி புரோகிராமாகத் தான் கிடைக்கிறது.

மேலும் டேப்கள் திரையின் மேற்புறத்தில் அழகாக அமைக்கப படுகிறது. இத்துடன் மற்ற பிரவுசர்களில் இல்லாத டாஸ்க் மேனேஜர் இதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த டேப்பில் உள்ள புரோகிராம் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்று பார்த்து அதனை வெறுமனே வைத்திருந்தால் நாம் மூடிவிடலாம். இதன் மூலம் மெமரி நமக்குக் கூடுதலாகக் கிடைத்து பிரவுசர் வேகம் அதிகரிக்கும். மேலும் டாஸ்க் மேனேஜர் மூலம் திறக்க மறுக்கும் இணைய தள டேப்பினை மட்டும் மூடலாம். பிரவுசரையே மூட வேண்டிய கட்டாயம் இருக்காது.


6. ஹோம் பேஜ்: குரோம் பிரவுசர் தனக்கென ஒரு ஹோம் பேஜோடு திறந்து கொள்கிறது. அதனைப் பயன்படுத்துகையில் இந்த புரோகிராம் நாம் செல்லும் வெப்சைட்டுகளை நினைவில் வைத்துக் கொள்கிறது. இதில் முதல் ஒன்பது வெப்சைட்கள் ஸ்நாப் ஷாட் போல மூன்றுக்கு மூன்று என்ற வகையில் காட்சி அளிக்கின்றன. இவற்றுடன் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சர்ச் இஞ்சின்களும் புக் மார்க்குகளும் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த ஹோம் பேஜ் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. நீங்கள் விரும்பும் எதனை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.


7. தனிநபர் தகவல்: அண்மையில் வெளியான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 தொகுப்பில் உள்ளது போல குரோம் பிரவுசரும் தனி நபர்கள் தங்கள் தகவல்கள் மற்றவருக்குத் தெரியக் கூடாது எனில் தனியான பிரவுசிங்கில் ஈடுபடலாம். இதனை குரோம் Incognito என அழைக்கிறது. இதற்கென தனியே ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் நீங்கள் என்ன தகவல் தேடினாலும், எந்த தகவல் தந்தாலும் கம்ப்யூட்டரிலோ அல்லது பிரவுசர் புரோகிராமிலோ பதியப்படாது. இதனால் ஒரே நேரத்தில் பொதுவான விண்டோ ஒன்றும் தனி நபரின் தனிப்பட்ட விண்டோ ஒன்றையும் திறந்து பிரவுசிங் செய்திடலாம்.


8. பிக் அப் வசதி: குரோம் பிரவுசரைத் திறந்தவுடன் நீங்கள் எந்த தளத்தில் விட்டீர்களோ அங்கு தொடங்க உங்களுக்கு ஆப்ஷன் தரப்படுகிறது. அது மட்டுமல்ல கடைசியாக இதனைப் பயன்படுத்திய போது எந்த எந்த தளங்கள் திறந்திருந்தனவோ அவை அனைத்தும் காட்டப்படுகின்றன.


9. ஷார்ட் கட் வசதி: நீங்கள் பிரவுசரைத் திறந்தவுடன் எந்த தளத்திற்குப் போக விரும்புகிறீர் களோ அதற்கான ஷார்ட் கட்டினை அமைத்துவிட்டால் போதும். அதில் கிளிக் செய்தால் குரோம் திறக்கப்பட்டு நேராக அந்த தளத்திலேயே இறங்குவீர்கள். குரோம் பிரவுசரை டவுண்லோட் செய்வது மிக எளிது. விரைவும் கூட. நீங்கள்பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் அதன் புக் மார்க்குகள், பேவரைட் தளங்கள் தாமாக இதில் ஒட்டிக் கொள்வதைப் பார்க்கலாம். விரைவில் மேக் மற்றும் லினக்ஸ் பதிப்புகள் வர இருக்கின்றன. குரோம் தற்போது 122 நாடுகளில் 43 மொழிகளில் படிப்படியாக வர இருக்கிறது. முதல் முதலாக கூகுள் இதனைச் சோதனைப் பதிப்பாகத்தான் வெளியிட்டுள்ளது. எனவே முழுமையான பத்திரமான பிரவுசர் என்று உறுதிப்படுத்தப்படும் வரை கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.


இதுவரை குரோம் தொகுப்பிற்கு எந்த ஆட்–ஆன் புரோகிராம் தொகுப்பும் இல்லை. இனி மேல் தான் எழுதப்பட வேண்டும். நிச்சயம் அதிக அளவில் விரைவில் இவை கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. பயர்பாக்ஸின் ஒரு சிறப்பான அம்சம் அது தரும் சிங்கரனை சேஷன் வசதியாகும். இதன் மூலம் உங்கள் ஹோம் பிரவுசர், லேப்டாப் பிரவுசர் மற்றும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் பிரவுசர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் இயக்கலாம். இதற்கு பழகியவர்கள் வேறு மாதிரியாக பிரவுசரைப் பயன்படுத்த இயலாது. குரோம் பிரவுசரில் இந்த வசதி இதுவரை தரப்படவில்லை.


குரோம் பிரவுசர் பயன்படுத்தும் கட்டமைப்பு வெப்கிட் என்பதன் அடிப்படையில் அமைந்ததாகும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் சிஸ்டம். ஆப்பிள் நிறுவனத்தின் பிரவுசரான சபாரியில் இதுதான் இயங்குகிறது. எனவே குரோம் பிரவுசர் மூலம் கிடைக்கும் ஒரு பக்கத்தினையும் பயர்பாக்ஸ் அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் கிடைக்கும் ஒரு பக்கத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் டெக்ஸ்ட் மற்றும் அவற்றின் பார்மட்டிங் வகைகளில் வித்தியாசம் தெரியும். இவை எல்லாம் தொடக்கத்தில் எந்த பிரவுசருக்கும் இருக்கத்தான் செய்யும். சர்ச் இஞ்சினில் தனியொரு சாம் ராஜ்ஜியத்தை அமைத்து இன்றும் பவனி வரும் கூகுள் நிறுவனம் நிச்சயம் பிரவுசர் மார்க்கட்டிலும் சிறப்பாகச் செய்திடும் என எதிர்பார்க்கலாம். இதுவரை கூகுள் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான தன் போரில் ஓப்பன் சோர்ஸ் நிறுவனமான மொஸில்லா பவுண்டேஷன் வழங்கும் பயர் பாக்ஸ் பிரவுசருக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. கூகுள் விளம்பரத்திற்கென பயர்பாக்ஸ் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அடுத்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2011 வரை இருக்கும்.


கூகுள் புதிய கண்டுபிடிப்புகளுடனும் நவீன வசதிகளுடனும் இன்றைய இணைய தளத்தேடலையும் இணைய உலாவையும் மிகச் சிறப்பாக ஆக்கும் முயற்சியே குரோம் என்னும் இந்த பிரவுசர் என்று கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு துணைத் தலைவர் சுந்தர் பிச்சை கூறி உள்ளார். ஆனால் மைக்ரோசாப்ட் குரோம் பிரவுசர் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரவுசர்கள் தளம் விசாலமானது, விரிவானது. யார்வேண்டுமானாலும் இதில் இறங்கலாம். ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மக்களின் எதிர் பார்ப்புகளை அதிகம் நிறைவேற்றுவதால் மக்கள் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தையே நாடுவார்கள் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரிவின் பொது மேலாளர் அறிவித்துள்ளார். அனைத்து பிரவுசர்களுமே நன்றாகத்தான் உள்ளன. ஒன்றுக்கொன்று ஒரு வகையில் சிறப்பு பெறுகின்றன. பயர்பாக்ஸும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் டொயோட்டோ கார் என்றால் குரோம் பிரவுசர் பறக்கும் சிறிய அழகான ஸ்போர்ட்ஸ் கார். அதில் ஏறிப் பறந்துதான் பாருங்களேன்

நன்றி, தினமலர் கணினி மலர்..

Wednesday 10 September, 2008

6, கதை சொல்ல போறேன்...

எனக்கு பிடித்த கதைகள் :

(தினமும் காலை வானொலியில் இன்று ஒரு தகவலில் கேட்டது)

திருடனின் ஏமாற்றம்:

ஒரு நாள் ஒரு திருடன் ஒரு வீட்டில் திருட சென்று இருந்தான். ஆனா பாருங்க அந்த வீட்டை பக்காவா பூட்டி வைத்து இருந்தாங்க. அங்க ஒரு சின்ன துவாரம் போன்ற ஜன்னல் மட்டும் தான் தொறந்து இருந்துச்சி.. அதுல எவ்வளவோ முயற்றி செஞ்சு பாத்தும் நுழைய முடியல.. ரொம்ப கவலையோட (!) திரும்பி வந்தான். இன்னைக்கு பொழப்பு போச்சே னு ரொம்ப feel பண்ணான்.

மறுநாள் காலை அந்த ஊருக்கு ஒரு கலை கூத்தாடி அவனது குடும்பத்தோடு சேர்ந்து பல வித்தைகளை காமிச்சுக்கிட்டு இருந்தான்.. அதுல ஒரு விதை அந்த திருடனை ரொம்ப கவர்ந்துட்டு..

கலை கூத்தாடி ஒரு சிறிய வலயத்துக்குள் முதலில் நுழைந்தான். பிறகு தனது மனைவியை நுழைய வைத்தான். பின்னர் தனது குழைந்தையும் அதுல நுழைய வச்சு ரொம்ப ஆச்சர்ய படுத்திக் கொண்டு இருந்தான்.

அந்த வித்தைகள் அனைத்தும் முடிஞ்ச பின்னாடி திருடன் மெதுவாக அந்த கலை கூத்தாடிய கூப்பிட்டு பேரம் பேச ஆரம்பிச்சான்.

உனக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ பணம் கிடைக்கும். ?? அவன் ஒரு அம்பது நூறு கிடைக்கும் அய்யா. னு ரொம்ப பணிவா சொன்னான்...

சரி .. உனக்கு நிறைய பணம் தர்றேன். எனக்கு ஒரு உதவி செய்வியானு கேட்டான். அதுக்கு அந்த கலை கூத்தாடியும் சரி னு சொல்லிட்டான்.

அன்று இரவு,

திருடன் அவனை அந்த வீட்டுக்கு அழைத்து சென்றான்.. அங்கே அந்த துவாரத்தை காண்பித்து, இங்கே நீ நுழைந்து எனக்கு தேவையானதை எடுத்து வர வேண்டும். பிறகு ரெண்டு பெரும் பங்கு போட்டுக்கலாம் னு பேசி நுழைய சொன்னான்.

ஆனா பாருங்க அவனால அங்க நுழைய முடியல. திருடனுக்கு ரொம்ப டென்ஷன் ஆகிட்டு.. யோவ்.. அங்க மட்டும் நீங்க மூணு பேரு சின்ன வட்டத்துக்குள்ள நுழைந்து வித்தை காட்டினீங்க. ஆனா இங்க ஏன் முடியல?? கொஞ்சம் காட்டமாவே கேட்டு விட்டான்..

அதுக்கு அந்த கூத்தாடி.. அய்யா சாமி.. நீங்க சொல்றது என்னவோ உண்மை தான். ஆனா நான், அம்பது பேரு சுத்தி நின்னு கை தட்டும் போது எனக்கு என்னமோ easy a இருந்திச்சி. அதனால நீங்க இப்போ போய் ஒரு அம்பது பேர கூட்டிட்டு வாங்க. நான் உடனே இந்த துவாரத்துக்குள்ள நுழைஞ்சி உங்களுக்கு வேண்டியத இந்த வீட்டுல இருந்து எடுத்து தர்றேன்னு சொன்னான்...

அவ்ளோ தான் அத கேட்ட உடன அந்த திருடன் மயங்கியே விழுந்துட்டான்....

moral of the story:
ஒருவனை நாம் உற்சாக படுத்தும் பொது அவன் செய்யும் காரியங்கள் அவன் இயல்பாக செய்பதை விட பல மடங்கு வேகம் இருக்கும்..
களவே செய்தாலும் அதற்கு கூட்டு சேர்த்தால் முடிவு நமக்கு சாதகமாக இருக்காது..

Monday 8 September, 2008

5. பிடித்த கவிதை

ஒரு தோழரின் கவிதை.. ..

ஏனோ அது நமக்கு சுள்ளென சுடும் வகையில் எழுதி இருந்தார்.. .. சற்று சிந்தித்து செயல் படுவோம்.

பேச்சில் தமிழை உபயோகப்படுத்துவோம்..

பணியில் ஆங்கிலத்தை உபயோகப்படுத்துவோம்


குத்திக் காட்டியது - என் தமிழ்.....!



தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்
குத்தியது முள் …

'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்....!


Tuesday 2 September, 2008

3. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்..

தொடக்க கல்வி:
-----------------------
பால்ய கால பருவத்தில் ஒரு சிறார் பள்ளியில் ( என் வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு அரசு தொடக்க பள்ளி) எனது ஆரம்ப கால கல்வியை தொடங்க ஆரம்பித்தேன்....

ஹ்ம்ம். அதுவும் அழகி படத்துல இருக்கற மாதிரி குறும்புகளுடன் கூடிய அனுபவங்கள் நிறைந்த பள்ளி தான். (ஒண்ணாம் கிளாஸ ரெண்டு வருஷம் படித்தது வேறு விஷயம்)..

அப்போது சிறு வயதாக இருந்ததுனால பாலின (!) வேறுபாடு இல்லாம தொடர்ந்தது எனது படிப்பு... (இப்போ இருக்கற பொடுசுங்க சின்னதுலேயே பழுத்த பழமாக மாறிட்டு இருக்குங்க. )...

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.. என் கிளாஸ் ல ஒரு பொண்ணு (அவங்க பேரு பக்கத்து தெரு பொண்ணு). என்கிட்டே நல்ல வம்பு இழுக்கும்... கோபத்துல கிள்ளி விட்டுட்டு ஓடிடுவேன்.. அப்புறம் சின்ன பந்தயம் வேற.. நான் கிள்ளி வச்சதுக்கு பதிலா அவங்க என்னோட தலைல கொட்டனும்.. (நான் கொஞ்சம் வளத்தி ஜாஸ்தி..).. எவ்வளவோ முயற்றி செஞ்சு பாத்தாங்க.. ஹ்ம்ம். ஹ்ம்ம் முடியல. ஆனா. கிளாஸ் ல உக்காந்து இருக்கும் போது மேடம் அவங்க முயற்றியில வெற்றி அடைஞ்சாங்க... (அப்பப்பா என்ன ஒரு கொட்டு... ) அப்பதான் அவங்க எவ்ளோ கோபத்துல இருந்தாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்...

அப்புறம் எங்க பள்ளியில் நிறைய மரங்கள் இருக்கும்.. அதனால நாங்க (பசங்க மட்டும் தான்) நிறைய கேம்ஸ் விளையாடுவோம்.. அதுல மரக்கொரங்கு -னு ஒரு கேம் ரொம்ப பேமஸ் .. அதுல ஒருத்தன் ஒரு குச்சிய ஒரு வட்டத்துக்குள்ள போட்டு அத பாதுகாப்பான். மத்த வாலுங்க மரத்து மேல இருக்குங்க.. அந்த காவல் காரன் மரத்து மேல ஏறி எவன தொட்டாலும் அவன் அவுட்.. அந்த கேப் ல வேற ஒரு பையன் இறங்கி அந்த குச்சிய எடுதாச்சினா மறுபடியும் அதே காவல்காரன் தொடரனும்...

இப்பல்லாம் பசங்க கம்ப்யுட்டர் முன்னாடி உக்காந்து விளையாடுற கேம்ஸ் தான் விளையாடுறாங்க. அதனால குழு விளையாட்டுக்களின் எண்ணிக்கை குறைஞ்சுட்டே வருது...

இது மாதிரி நிறைய அனுபவங்கள் .. .. .. நிறைய நினைவுகள்.. .. ..

மத்தபடி நான் கொஞ்சம் படிப்புல கெட்டி.. அதனால இன்னைக்கும் என்னோட தொடக்கபள்ளி ல என்ன ஞாபகம் வச்சு இருக்காங்க..

அப்படியே ரொம்ப ஜாலியா முடிஞ்சது என்னோட தொடக்க கல்வி..

அடுத்து ஆறாம் வகுப்புக்கு வேற பள்ளியில என்னைய சேர்த்து விட்டாங்க. (அங்க வெறும் பசங்க மட்டும் தான். :-( )

தொடரும் .. .. ..

Monday 1 September, 2008

1. ஒரு அறிமுகத்திற்காக..

எனக்கு போதிய நேரம் இல்ல. நேரம் இருக்கும் போது எனக்கு பிடித்த, எனக்கு தோன்றிய விசயங்களை நான் பதிர்ந்து கொள்கிறேன்..
நன்றி..

கீழே இருக்கின்ற படம் சும்மா .. .. எனது இனையத்தளத்தின் பெயரை ஞாபகப் படுத்துவதற்காக மட்டுமே.. மற்றபடி எனக்கு இந்த கடலையை தவிர வேற எந்த கடலையை பற்றியும் சத்தியமாக தெரியாதுங்கோ .. ..




















குறிப்பு:
ஆனால் விவரம் தெரியாத சில (ஹூ ஹ்ம்ம். .. நிறைய) பேர் என்னை போன்றசில பேரை கடலை போடுகிறாய் கடலை போடுகிறாய் என்றுகூறிக்கொள்கிறார்கள் (அவர்கள் காதில் புகை போவது வேறு விஷயம்.. )

2. பிடித்த கவிதை.. ..

ஒரு நண்பர் எனது கையெட்டில் எழுதியது.. அதை அப்படியே இங்கே எழுதி இருக்கேன்.

தோழி,,,
தோழனின் பெண்பாலாம்!!! .. தெரியவில்லை
என் தோழமையில் அந்த பாலின வேறுபாடு...


ஆஹா! என்ன அருமையான வரிகள் .. ஒரு வேளை, நானும் மேல குறிபிட்டுள்ளபடி இருக்கறதுனால என்னை அதே (Groundnut king) போல கூப்பிடுறாங்களோ. .. .. ..