Wednesday 17 January, 2018

பூச்சி விரட்டி... தடுப்பூசி...

வணக்கம்...

பூச்சி விரட்டி பயன்படுத்தி, வளர்க்கப்பட்ட "தலைமுறையின்" சார்பாக பேச வந்துள்ளேன்...

அட ஆமாங்க..
இந்த பூச்சிக் கொல்லி மற்றும் செயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளர்த்த காய்கறி, பழங்களைக் கொடுத்த வளர்ந்த தலைமுறை நான்...
Horlicks குடித்து வளர்ந்த தலைமுறை!!!
தடுப்பூசி போட்டு வளர்ந்த தலைமுறை!!!

எனது தந்தைக்கும் எனக்குமான விவாதங்களில் அடிக்கடி இடம்பெறும் விவாதப்பொருட்கள்..
1) நெகிழிப்பைகள் பயன்படுத்துவது
2) உரம் பயன்படுத்துவது
3) பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது
4) பாரம்பரிய விளைபொருட்கள்

இதில், சமீப காலத்தில் விவசாயம் தொடர்பான விவாதங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. நான் கூறிய ஒரே காரணத்திற்காக, இது வரை பூச்சி மருந்து அடிக்கவில்லை. அதன் விளைவு, அனைத்து பயிர்களிலும் பூச்சிகள்!!!

இலைகள் முற்றிலும் அரிக்கப்பட்டு விட்டன...
உளுந்தங்காய்களில், பயிர் இல்லை.. உண்ணப்பட்டு விட்டன..
விளைச்சல் முழுவதுமாக பொய்த்து போன நிலைமை...

அருகில் இருக்கும் பயிர்களைப் பார்த்து பார்த்து, எனது தந்தை என்னிடம் ‘சிறிதாக’ கோபத்தினை காட்டியதன் விளைவாக,

எனக்குள் தோன்றிய விடயங்கள்..
1) மருந்து அடிக்காவிடில், பயிர்களுக்கு ஏன் எதிர்ப்பு சக்தி வரவில்லை?
2) காலம் தவறி விளைவித்ததாலா?
3) மழை காரணமா?
4) பக்கத்து தோட்டத்தில் அடித்த பூச்சி விரட்டிகளால், விரட்டப்பட்ட பூச்சிகள் படையெடுத்ததன் விளைவா?
அல்லது,
5) விதைகள் தரம் குறைந்தனவா?

எனக்கு 5-வது காரணம் தான் தலையான காரணமென்று தோன்றியது. தரமில்லாத விதைகளிலிருந்து, எதிர்ப்பு சக்தி இல்லாத பயிர்கள் விளைந்ததன் விளைவு, பூச்சிகளுக்கு இரையாக...

ஆக, விவசாய அலுவலகமே, தரமில்லாத விதைகளை வழங்கி வருவது வேதனை தரக்கூடிய ஒன்று...
அவர்களே, அதற்கு வேண்டிய “செயற்கை உரம்” மற்றும், “பூச்சிக்கொல்லி” வழங்குவது இன்னும் கொடுமை.

பாரம்பரிய நிலத்தில் விளையக்கூடிய பயிர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருக்கும். எங்கள் ஊரில் (வி.வேடபட்டி) கீழ்கண்ட பயிர்கள் மட்டுமே விளைந்த காலம் அது...

1) சீனிக்கிழங்கு (Sweet Potato)
2) சிறுதானியங்கள்
  (கம்பு, கேழ்வரகு, சோளம், மக்காச்சோளம், குதிரைவாலி அரிசி)
3) பனங்கிழங்கு

மேற்கூரிய பயிர்களுக்கு தேவையான நீர் மிகக்குறைவு..
வருமானம் குறைவு எனினும், மகிழ்வான வாழ்க்கை இருந்த காலம்..
மக்கள் மட்டுமல்ல, மண் கூட மகிழ்வாக இருந்த காலம் அது.

பணப்பயிர்களின் மோகம் அதிகரிக்க அதிகரிக்க, மண் வளம் குன்றிப்போனது
நீர் தேவையும் அதிகமானது
எதிர்ப்பு சக்தி முற்றிலும் அழிந்து போனது..

இதை எப்படி சரி செய்வது? யார் சரி செய்வது?

இயற்கை விவசாயம் செய்யுங்கள் எனச் சொன்னால், ”நீ வந்து செய்”, என சொல்கின்றார்கள் எனது அப்பா...

இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஆசை தான்..
ஆனால், எப்படி செய்வது? என்று அதைச்செய்வது? - இன்னும் விடை தெரியா கேள்விகள்.

நமது தேவைகள் குறையும் காலம் எதுவோ, அதுவே நமது சிறு சிறு ஆசைகள் நிறைவேறும் காலம்!!!

மொத்தத்தில்,
பாரம்பரிய நிலத்தில் அதுவாகவே வளரும் பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தி மிக மிக அதிகம்... உதாரணமாக, எங்களது காட்டில் வளரும், அதலக்காய் என்னும் பயிர், மழைக்காலங்களில் தானாகவே விளைந்து காய்கள் தருகின்றது.. அதுவல்லவோ அதிசயம்??

உரமில்லை.. பூச்சியில்லை... இன்னும் வாழ்கின்றது!!!

அதைப்போல் தான், குழந்தைகளுக்கும்...

கருவில் உருவான தினத்தில் இருந்தே, செயற்கை மருந்தில் வளரும் குழந்தை எவ்வாறு எதிர்ப்பு சக்தியுடன் வாழும்? ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு தடுப்பூசி, மருந்துகள்... ச்சே...

மருத்துவ அரசியல்.. மிக மிகக் கொடுமையானது!!!

நன்றி..