Friday 14 June, 2019

பேச்சுலர் பரிதாபங்கள்

இது பேச்சுலராகவே இருப்பவர்களின் பரிதாபங்கள் அல்ல!

தற்காலிக பேச்சுலர்களின் பரிதாபங்கள்!

அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்.
காத்தாலயே என் வீட்டம்மாவும், புள்ளைங்களும், கட கடனு எழுந்து ...

எந்திச்சி,
குளிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் எப்பவும் போல, எழுந்து பசங்களுக்கு பல் தேய்க்க ரெடி பண்ணிட்டு, குளிக்க ஆரம்பிச்சேன்.
வேற வழியில்லயே..
காலைலேயே குளிக்க வேண்டி இருக்கு.

ஹ்ம்ம். நண்பர் ஒருவரின் வண்டிய பிடிச்சு, SFO Airport-ஐ ரெண்டு சுத்து சுத்தி, கடைசியில ’டிபார்ச்சர் கேட்’ அருகே இறக்கி விட்டாச்சு.. அடுத்த மூன்று மணி நேரத்துல ப்ளைட்! (ஐயா, ஜாலி)

உள்ளார போய், பொட்டிகளை பத்திரமா ஒப்படைச்சு, செக்யூரிட்டி கேட் வரை விட்டுட்டு (போய் இருக்கலாம்)!, அங்கனயே சுத்திகிட்டு இருந்தேன்.

ஏன்னா, முந்தின நாள் ப்ளைட் கேன்சல் ஆகிட்டு.. அதனால ப்ளைட் டேக் ஆஃப் ஆகுற வரை, பொறுமையா(!) காத்து இருந்தேன்
(சத்தியமா திரும்பி வந்துட கூடாதுங்கிற பயத்துல இல்ல சாமி..)

ஒரு வழியா மதியம் 12:15 க்கு கிளம்(ப்)பிய மகிழ்ச்சிகரமான செய்தியோடு,
”எம் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா”-ன்னு லைட்டா குதிச்சிட்டு, ஊட்டுக்கு புறப்பட்டேன் (ஜனகராஜ்-இன் காமெடி இன்னும் எத்தனை கணவர்களுக்கு வரப்பிரசாதமோ)

வீட்டுக்கு வந்தா, வயிறு ஏதோ சத்தம் போட ஆரம்பிச்சது! அங்கு தான், பேச்சிலரின் பரிதாபங்கள் துவங்கியது.

(ஆத்தாடி, ஓப்பனிங்-கே இவ்ளோ நீளமா இருக்குதே!!!, சரி பினிஷிங் ஷார்ட்டா முடிச்சிடுறேன்)

வயிறு பசித்ததால், நேத்து சுட்டு வச்ச சப்பாத்திய மைக்ரோவேவ்-ல வச்சிட்டு,
முந்தாநாள் வச்ச, காளான் பொரியலையும் சுட வச்சி சாப்பிட ஆரம்பிச்சேன்!

”வாழ்க மைக்ரோவேவ்” - என்று என் மைண்ட்வாய்ஸ் சத்தமாகவே அலறியது!

மறுநாள்!
அருமையான (யெஸ், இட் இஸ் வெரி டேஸ்ட்டி) காஃபியுடன் எனது 100% பேச்சுலர் வாழ்க்கையினை துவக்கினேன்!

-- தொடரும்



Thursday 6 June, 2019

மதிப்பிழப்பு

மதிப்பிழப்பு...

நாள்: 8 நவம்பர் 2017

இன்றோடு ஓராண்டு முடிவுற்றது...
மதிப்பிழப்பு வெற்றியா தோல்வியா என்றறிய விரும்பி சற்று பின்னோக்கி பயணித்தேன்..

கையில் இருந்த ரூ 4,000/--ஐயும் தூக்கிக்கொண்டு வங்கிக்கு ஓடினால், வாயில் கதவே தெரியவில்லை

சரி அலுவலகம் சென்ற பின், மதிய உணவு இடைவேளையில் வந்து பார்த்தால், காலையில் நின்ற பல பேர், அங்கேயே உணவு உண்ணாமல் நின்றது காண நேர்ந்தது..

எப்படியோ சில சிரமங்களை (/நாட்களைக்) கடந்து, இருந்த பணத்தையும் வங்கியில் ‘கொட்டியாச்சு’
(ஆமாம், வங்கி காசாளர்கள், பணத்தினை வாங்கி கொட்டிக் கொண்டிருந்தனர் கட்டு கட்டாக)

சரி செலவுக்கு என்ன செய்வது?
மறுபடியும் வங்கியின் வாசலில்!!!

பணத்தினை கொட்டுவதைக் காட்டிலும், பெறுவதில் தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளானேன் நான்.
(இதிலும் சில நாட்கள் செலவாகி இருந்தது. டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு குறைந்தபட்சம் ரூ 500 வரை செலவு செய்ய வேண்டி இருந்தது)

சூப்பர் மார்கெட்களில் கூட்டம் வழித்தோடியது Digital பண அட்டையைத் தேய்ப்பதற்கு..
(ஒரு பிரபல Super Market நிறுவனம், நமது ATM card-kku ரூ 2000 வேற தந்து கொண்டிருந்தது.. இங்கு தான் எனக்கு mild-a இடித்தது!!!)

’பெங்களூரிலேயே நவம்பர், டிசம்பர் ’இப்படியாகத்தான்’ சென்றது..
கிருஸ்துமஸ் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்ற போது தான், நான் பட்ட துயரங்களைக் காட்டிலும், பல மடங்கு சிரமப்பட்டவர்களைக் காண நேர்ந்தது (ஏரியாவுக்கு ஒண்ணே ஒண்ணு தான் இருக்கும் ATM. அதுலயும் பணம் இருக்காது )

முற்றிலும் பணப்புழக்கம் குறைந்த காலம் அது.. செலவுக்கே பணமில்லாத போது, நான் கையில் கொண்டு சென்ற ’சில ஆயிரங்களும்’ அவர்களுக்கு
பேருதவியாக இருப்பதைக் கண்டு வியப்புற்றேன்..

இது எனக்கு நெருங்கிய வட்டங்களில் நடந்தது.. நல்ல வேளை, என் வட்டத்தில் பக்தாள் யாருமில்லை...

”இன்று பல நிறங்களில் பணத்தினை அச்சடித்து வெளியிட்டாலும், மக்கள் மனதில் கருப்பாகவே அமைந்தது ரூ 500, ரூ 1000 பண மதிப்பிழப்பு!!!”

#Demonetisation
#November8

பயம்


எளியவர்களின் பயம்
வலியவர்களின் மூலதனம் - (அடிமைத்தனம்)

மக்களின் மறதி
மக்கள் பிரதிநிதிகளின்(!) மூலதனம் - (அரசியல்)

நல்லவர்களின் தயக்கம்
பாவிகளின் மூலதனம் - (எதற்கும் அஞ்சா பாவசெயல்)

ஏழைகளின் பணம்
முதலாளிகளின் மூலதனம் - (பகற்கொள்ளை)

படித்தவர்களின் அவசரத் தேடல்
அரசு அலுவலர்களின் மூலதனம் - (கையூட்டு)

சரி, இதன் content தான் enna?

நமது ஏதோ ஒரு செயல்,
மற்றவர்களின் மூலதனமாக மாறும் போது,

நாம் ஏன் மாறக்கூடாது?
அவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் நாம்
உடனே காட்டும் எதிர்வினை,
அவர்களை புறமுதுகிட்டு ஓட செய்யும்...

மறவாது இருப்பீர்.

காலம் வரும்போது எதிர்வினை ஆற்றுவீராக...

நன்றி...

கல்வியறிவு(!) -- அழிவு

கல்வியறிவு(!) -- அழிவு

கற்றல் அறிவைத் தருவதில்லை
இன்றைய கற்றல் நல்லறிவைத் தருவதில்லை

அழிக்கும் அறிவை மட்டுமே தரத்துவங்கியுள்ளது
(பல பேருக்கு)

அறத்தினை அழித்தல் (முதல் அழிவு)
ஆண்மையினை மறத்தல் (அழித்தல்)

அன்பினை அழித்தல்
இரக்கத்தினை அழித்தல்

பண்பினை அழித்தல்
மாண்பினை அழித்தல்

பொறுமையினை அழித்தல்
உறவின் பெருமையினை அழித்தல்

இன்னும் பல அழிவுகள்....
அறம் (Morality) வளர்க்கப்பழகு!!!

அனைத்தும் திரும்பும் நல்வழியில்...
சமூகம் உட்பட...

வணக்கம் நண்பர்களே...
”இன்றைய காலத்திலும்” அறம் வளர்க்கும் நண்பர்களுக்கு நன்றிகள்!!!

கரையும் கண்மணிகள்

சிறுகதை! சில நிமிட வாசிப்பு!!

”ப்ளாஸ்டிக் பூக்கள்”

(கரையும் கண்மணிகள்)

ஒருநாள், கண்மணியின் பெற்றோர் (ராகவி, ரகு) கடைக்கு கிளம்பும்போது,
ராகவி: கண்மணி! கண்மணி! விளையாடியது போதும், வா, கடைக்கு போகனும்.

கண்மணி: இல்லம்மா, நான் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடனும்மா ப்ளீஸ். நீங்க வேணா போய்ட்டு வாங்க.. நான், இந்த கயல் ஆண்ட்டி வீட்லேயே இருக்கிறேன்.
ராகவி: சரி எங்கேயும் போகாம, இங்கேயே இரு.
கயல், கண்மணிய கொஞ்சம் பார்த்துக்கோ. நான், கடைக்கு போய்ட்டு, ஒரு 2-மணி நேரத்துல வந்துடுறேன்
(கயல், கண்மணி அம்மாவின் தோழி)

கடையில், தேவையான பொருட்கள் வாங்கும் போது, வாட்ஸப்பில் ஒரு பதிவு வருகின்றது
“சென்னையில் பயங்கரம்!!! வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை! இறுதியில், உயிரோடு எரித்துக்கொலை!!!”
ராகவி: சிறிது பதட்டத்துடன், தனது தோழி கயலுக்கு அழைப்பு கொடுக்கிறாள்.

”கயல், கண்மணி எப்படிமா இருக்கா? என்ன பண்ணிகிட்டு இருக்கா மா?”

கயல்: சொல்லு ராகவி… கண்மணி, வீட்டில தான் விளையாடிட்டு இருந்தா. நான், இப்ப தான், என்னோட பையன கூட்டிட்டு, டிராயிங் கிளாசுக்கு வந்தேன். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வீட்டுல, என் வீட்டுகாரர் ஏதோ வேலை பாத்துட்டு இருந்தாரு. அதான், நானே இவன ட்ராப் பண்ண வந்தேன்.

ராகவி: ஓ, அப்படியா. சரி கயல். நல்லது. சும்மா தான், எப்படி இருக்கானு கேட்டேன். டேக் கேர்.. அப்புறமா பேசுறேன்.. வச்சுடுறேன்.
கணவரிடம்,
“ஏங்க, எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. கண்மணி, 7-வயசு பொண்ணு. அவள தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாதுனு படபடக்குது. வாங்க சீக்கிரமா வீட்டுக்கு போகலாம்.

ரகு: இருமா, பில்லிங் கவுண்டர் ல கூட்டம் அதிகமா இருக்கு.. இன்னும் பதினஞ்சு நிமிசத்துல முடிச்சிடலாம். வீட்டுக்கு, இன்னும் முக்கால் மணி நேரத்துல போய்டலாம்..

ஆனால், அம்மா-வுக்கோ, 45-நிமிடங்களும், 45-வருடங்களாய் நகர்ந்தன…
பில்லிங் மற்றும் ட்ராஃபிக் எல்லாவற்றையும் கடந்து, ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வீட்டிற்கு அல்ல, கயல் வீட்டிற்கு!!!

டிங் டாங் (காலிங் பெல் ஓசை ஒலித்ததும் சிறிது நிமிடங்கள் கழித்து, கதவு திறக்கும் ஓசை கேட்டது)

கண்ணன்: வாங்க வாங்க!!! என்ன, அதுக்குள்ள வந்துட்டீங்க.. 2-மணி நேரம் ஆகும்னு சொன்னீங்க. ட்ராஃபிக் ஏதும் இல்லையா?
(ஜோக் என்றாலும், சிரிப்பு வரவில்லை ராகவிக்கும், ரகுவிற்கும்)

ஹாலில் விளையாட்டு இருந்த கண்மணி அங்கு இல்லாததால், வீட்டில் கண்களை அலசிக்கொண்டே பேச்சு கொடுத்தார்கள்..

ராகவி: கண்மணி ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டாளா? உங்களுக்கு ஏதோ வேலை இருக்குதுனு கயல் சொன்னா. தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கனும்.
ஆமா கண்மணிய எங்கங்க? விளையாட்டுப்பொருட்கள் அப்படியே கிடக்குது. ஆள காணோம்?

கண்ணன்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க.. அவ பாட்டுக்கு தான் இருந்தா. அவசரமா, பாத்ரூம் வருதுனு சொன்னா. அதான் பாத்ரூம் போய் இருக்கா. இப்ப வந்துடுவா.

ராகவிக்கு பதட்டம் அதிகரிக்கவே செய்தது..
கண்மணி, கண்மணி என்று கூப்பிட வேண்டும் போல இருந்தது.. ஆனால், தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள்.

கண்ணன்: ஏன், உங்க ஃபேஸ் ஒரு மாதிரி இருக்குது? ஏதும் ப்ராப்ளமா? இஃப் யு டோண்ட் மைண்ட், என்கிட்ட சொல்லலாம்!
ராகவி: இல்லங்க. இப்போ ஒரு செய்தி பார்த்தேன். பார்த்ததில் இருந்து மனசுக்கு சரியே இல்ல. அதான்…

கண்ணன்: எந்த செய்தினு தெரிஞ்சுக்கலாமா?
ரகு: இல்ல கண்ணன், அது வந்து! அது வந்து! நேத்து சென்னை-ல, சென்னைல,

கண்ணன்: ஓ, அதுவா. நானும் பார்த்தேங்க. மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்துச்சி. இப்படி பிஞ்சு குழந்தைகள்னு கூட பாக்காம, எப்படித்தான் மனசு வருதோ. அவங்கள எல்லாம் என்ன பண்றது?
ராகவி: சரிங்க. இவ்ளோ நேரம் ஆச்சு, கண்மணிக்கு என்னாச்சு? காணோம்?
கண்ணன்: ஹ்ம்ம். இப்போ எனக்கு புரியுது. உங்க பதட்டத்துக்கு என்ன காரணம்னு. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.
பசிக்குது-னு சொன்னா, அதான் கொஞ்சம் ப்ரட் ரோஸ்ட் பண்ணி கொடுத்தேன்.. அப்புறம் கொஞ்சம் மில்க் ஆத்தி கொடுத்தேன். அதான், சம்திங் ராங்னு நினைக்கிறேன்.. (என்னோட சமையல் ஒத்துக்கல போல)

கண்மணி, பாத்ரூம்ல இருந்து வெளிப்பட்டு ராகவியை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். நெறைய ப்ரட், அப்புறம் மில்க் சாப்பிட்டேனா, அதான் வயிறு சரியில்லமா. இப்போ, ஆல் க்ளியர் ஆகிட்டு மா

கண்ணன்: ரகு ப்ளீஸ் நோட், எனக்கு பெண்குழந்தை இல்ல. அதனால, கண்மணிய என்னோட குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன். நீங்க நினச்சிட்டு வந்த மாதிரி எதுவும் நான் பண்ணல. நான் ஒரு நல்ல ”தந்தையாக” இருக்க விரும்புறேன். ஸோ, தயவு செய்து, உங்க மனசுல இருந்து, என்னைப்பற்றி நினச்சு இருந்தத அழிக்கனும்னு ரிக்வஸ்ட் பண்றேன். ப்ளீஸ்.

ராகவி: ஆமா, எங்களுக்கும் ”ஆல் க்ளியர்” ஆகிட்டு!!!
ரகு: ஆனந்த கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறார்.

”மையக்கருத்து:”
பெண்குழந்தைகள் மீது சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் வன்மமும், பெற்றவர்களின் மனதில் ஆயிரம் சந்தேகங்களையும், பதட்டத்தையுமே வளர்க்கின்றன. ஆண்கள் மீது இருந்த மதிப்பு குறைந்து, பயம் அதிகமாவது வேதனை…

இப்படி, ஒவ்வொரு பூக்களையும், மொட்டுக்களிலேயே நசுக்கி, அழித்துக்கொண்டே இருந்தால், வரும் காலத்தில் பூக்களுக்கு எங்கே போவீர்கள்?

கண்களை மட்டும் கவரும் ”ப்ளாஸ்டிக் பூக்களை” அணிந்து கொள்ள வேண்டியது தான்!!! வேறு என்ன செய்ய?

இக்குற்றத்திற்கு கடும் தண்டனை மட்டும் தீர்வாகாது. அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

பெண் என்பவள், இன்னோரு பாலினம் அவ்வளவே.
அவர்களுக்கு அடிபட்டாலும் வலிக்கும். நமக்கு பட்டாலும் வலிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்ல வேண்டியது பாவங்களை அல்ல.. படிப்பினைகளை.. நல்லொழுக்கங்களை!!!

நன்றியுடன் தேவா…

வீட்டுக்கு வீடு வாசப்படி

சும்மா. Fun

வீட்டுக்கு வீடு வாசப்படி

மனைவி: என்னங்க. எங்க இருக்கீங்க? (கொஞ்சம் சத்தமான குரலுடன்)
கணவன்: ஏன்? இங்க தான் மா இருக்கேன். (முகத்தில் லேசான கலவரத்துடன்)

மனைவி: ஆமா, சும்மா தான் கேட்குறேன். நீங்க எனக்குன்னு என்ன தான் செஞ்சி இருக்கீங்க?
கணவன்: (குழப்பத்துடன்) போன மாசம் தானே மா, கல்யாண நாளைக்குன்னு, ரெண்டு பவுன் ல வளையல் வாங்கி கொடுத்தேன். அப்புறம் போன ஞாயிற்றுக்கிழமை கூட ஒரு பட்டு புடவை எடுத்துக் கொடுத்தேனே மா?

மனைவி: அப்போ, நீங்க எல்லாத்தையும் சொல்லிக் காண்பிக்குறதுக்கு தான் செய்றீங்களா?? ஹ்ம்ம்ம்..
கணவன்: (மிரட்சியுடன்) இல்லம்மா, நீ.... தானே மா கேட்ட.. என்ன பண்ணீங்கன்....னு?

மனைவி: ஆமா, இதுக்கு நீங்க எனக்கு செய்யாமலே இருக்கலாம்ல.. பெருசா செஞ்சிட்டீங்களாக்கும்.
கணவன்: சரிதான் தாயே. நீ சொன்னது தான் சரி. அது போன மாசம், போன வாரம். இப்போதைக்கு நான் உனக்கு எதுவுமே செய்யல.. ஒத்துக்கிறேன்...

மனைவி: அது.
கணவன்: சரி. என்ன வேணும் சொல்லுமா?
(எப்படியெல்லாம் லாக் ஆகிக் கிடக்குறாங்க (சில) பாவப்பட்ட கணவன்மார்கள்)

Wednesday 6 March, 2019

பணமும் நீரும்



பணம்! நீர்!

சில பேருக்கு தண்ணீராக
பல பேருக்கு கண்ணீராக

சில பேருக்கு ஏரியாக
பல பேருக்கு ஓடும் நதியாக

சிலருக்கு பன்னீராக
பலருக்கு வெந்நீராக

சிலருக்கு பெருவெள்ளமாய்
பலருக்கு சிறு துளிகளாய்

தண்ணீர் போல துள்ளித் திரியும்
உன்னிடம் ஒரு வேண்டுகோள்!

பாயுமிடமெல்லாம் தங்கிவிடு சிலகாலம்!
ஆம்,
நீரின்றி காய்ந்த இடத்தில் மட்டும்
பாயும் பொழுதெல்லாம் தங்கிவிடு!

அவர்கள் மனமும் வாழ்வும் செழிக்கும் வரை
நனைத்து விட்டுப் போ!

கொழுத்து கிடக்குமிடத்தில் வற்றிவிடு!
உடனே வற்றிவிடு!

ஆம்,
தேக்க இடமின்றி இருப்பவர்களிடம்
உடனே வற்றிவிடு!

கிணற்று நீர் போல நிலைத்து நில்லாதே!
ஓடும் நதி போல ஓடிக்கொண்டே இரு!