Saturday 10 February, 2018

திருமணநாள் நினைவு கூர்தல்

எப்படி நடந்தது என்றறியவில்லை நான்!!!

அவள் என்னுடன் இணைந்து, 12-ஆண்டுகள் பயணித்தது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை..

இது நான் செய்த தியாகமா? இல்லை,
என்னவள் செய்த தியாகமா? இல்லை,
இருவரும் இணைந்து செய்த சாதனையா ?

முதலாம் ஆண்டில், (அறியா வயதில்) பெரிய எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய மண வாழ்வு, 

சில பெரிய எதிர்ப்புகளுடன் கடந்த வாழ்வு,
(இன்னும் எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன)

சில பெரிய ஏற்றத்துடனும்,
பல சிறிய ஏமாற்றங்களுடனும்,

சில பெரிய ஊடல்களுடனும்,
பல சிறிய ஊடல்களுடனும்,

பல முறை ”பிரிந்தே சென்று விடுவேன்” என முறைத்த பொழுதுகளிலும், நாட்களிலும்
பயணித்தோம் நாங்கள்...

முத்துநகரில் துவங்கி, ஐடி தலைநகரில் கடந்து, இன்று, சிலிகான் வேலியில் நிலை கொண்டுள்ளது எங்களது மண வாழ்வு...

ஆக, இன்று 12 ஆண்டுகள் முடிந்து, 13-ஆம் ஆண்டில் நடை எடுத்து வைக்கின்றோம்...
இன்னும் பல ஆண்டுகள் ஒன்றிணைந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையில்..

”கடவுள்” மற்றும் ”ஆண்டவரின்” ஆசிர்வாதமும்,
பெற்றவர்கள், பெரியவர்களின் ஆசியும்,

நண்பர்களின் அன்பும் இருக்கும் வரை, எங்களது கனவு நிறைவேறும் என்பதில் எனக்கு துளி ஐயமில்லை...

07 Sep 2017 is our 13th Wedding Day (12th Wedding Anniversary)...

பசுமரத்தாணி 2 (சிறு பாகம்)


எழில் அப்பா: இந்தா பாரு, எழில், முதல்ல டிவிய switch Off பண்ணு, அப்புறம் சாப்பிடு!!
எழில்: ஓ.. அப்டீனா,
”சாப்பிட்டுட்டே” டீவிய பாக்கக்கூடாது
”சாப்பிட்டுட்டு” டீவி-ய பாக்கணுமா அப்பா?

எழில் அப்பா: அடேயப்பா, நான் சொன்ன விசயத்த, ”அழகான வார்த்தைகள்” பயன்படுத்தி சொல்றியே ராசா.. நல்லா வருவ எழில்..

எழில்: சரிப்பா, இனிமேல் டீவிய ஆஃப் பண்ணிட்டே சாப்பிடுறேன் அப்பா.

நம்ம சொல்ற விசயத்த பசங்க மனசுல பதியிற மாதிரி சொன்னா போதும். கற்பூரம் மாதிரி பிடிச்சிக்கிறாங்க பசங்க..

ஏன்னா, குழந்தைகள் எப்பவுமே பசுமரம்.. நாம தான் நல்ல ஆணிய பதமா அடிக்கனும்
அது, நிச்சயமா, ஆழமா வேர் வரை செல்லும்!!!

இன்னும், ஒரு பசுமரத்தாணி பதிவுடன் அடுத்து வருகின்றேன்!

நன்றி.

யூஸ் அன்ட் த்ரோ...

நண்பனிடம் ஓசி மை வாங்கி தேர்வு எழுதிய நியாபகங்கள்!
குறைந்தே போனது ஓசி மை தந்த பிணைப்புக்கள்!

பிணைப்புகளை ஓரங்கட்டிய, ”யூஸ் அண்ட் த்ரோ பேனாக்கள்” !
பெரிய இடத்து நண்பர்களிடம் மட்டுமே உலா வந்த ஹீரோ பேனாக்கள்
ஹீரோவையும் சென்றவிடம் தெரியாமல் அழித்த ரேனால்ட்ஸ் பேனாக்கள்!..

ரோட்டோமேக்ஸ் போன்ற இன்னும் பல “பிளாஸ்டிக்” அரக்கன்களை,
”பேனா உருவில்” வரவேற்ற தலைமுறை நாங்கள்..

கண்ணாடி டம்ளரில் மட்டும் டீ குடித்து வளர்ந்தவர்கள் நாங்கள்!

யூஸ் அண்ட் த்ரோ கப்-பில் குடித்தால் நாகரிகமென்று நினைக்கத் துவங்கிய தலைமுறையும் நாங்களே!!!

வாழை இலையில் உணவருந்தி வளர்ந்த தலைமுறையும் நாங்கள் தான்!

நெகிழித்தாள் இலையில் அவசர உணவகங்களை
உருவாக்கிய தலைமுறையும் நாங்களே தான்!

அண்ணாச்சி கடையில் பழைய செய்தித்தாள் பொட்டலங்களில் பருப்பு, சீனி வாங்கிய நியாபகங்கள்!

”அருமை(!) அங்காடி”களில் (Super Market), நெகிழிப்பை பொட்டலங்களில் வாங்கினால் ஹைஜீனிக் என்று நினைக்கத் துவங்கியதும் நாங்கள் தான்!

சில்வர் டிஃபன் பாத்திரங்களில் உணவு வாங்கிய தலைமுறையும் நாங்களே
நெகிழிப்பை பார்சல் உணவை வேண்டியதும் நாங்களே!

இவ்வாறு தினசரி வாழ்வில் ஒன்றோடு ஒன்றாக இணைந்து விட்ட ”யூஸ் அண்ட் த்ரோ” வாழ்வியல், நம் உறவுகளையும், நட்புக்களையும் யூஸ் அண்ட் த்ரோ-வாக மாற்றுவது வெகு தூரத்தில் இல்லை!!

வேதனையுடன்....
-- தெய்வேந்திரன்