புது வருசம் வந்தாச்சு 2026
பல கனவுகளுடன் நுழைந்தோம் 2025-இல்
இன்று,
எதையோ சாதித்து விட்டோம் என்ற உணர்வுகளுடன்!
பல நினைவுகளுடன் பிரிகின்றோம் 2025-ஐ விட்டு!
ஆனாலும், இன்னும் சில, கனவுகளாகவே!
ஆம், நமது கனவுகளை நனவுகளாக மாற்ற
நமது உடல் நலம் மிக முக்கியம் என்பதை உணர்த்தியதும் 2025!
சிறிய பிளாஷ்பேக் - 2025
ஆமாங்க, ஒவ்வொரு நாளையும் நலமாக கடந்து விடலாம்னு நினச்சு, அந்நாளை தொடங்குவோம். ஆனால் அந்த நாளின் இறுதியில், அது நமக்கு புதிய அனுபவத்தை கற்றுக் கொடுக்க மறப்பதில்லை.
ஏன்னா, நடப்பதெல்லாம், வேறு திசையில் நம்மை இழுத்து பிறகு, நாம் எண்ணிய திசையில் திருப்பி விட்டு விடும். நடு நடுவே கொஞ்சம் சவால்களும், கொஞ்சம் புதுமைகளும் குறைவில்லாமல் கிடைத்திருக்கும்.
ஆபீஸ் வேலைக்கு காலையில் வேக வேகமாக புறப்பட்டுச் சென்று, அங்கு உடன் வேலை பார்க்கும் நபர்களிடம் கலந்துரையாடி விட்டு, பிறகு கிடைக்கும் சிறு சிறு இடைவெளிகளில் அரட்டைகள் அடித்து விட்டு, மாலையில் மறுபடியும் வேக வேகமாக வீட்டிற்கு ஓடி வருவோம். பயண நேரங்களில் உடன் வருவது நமது கைபேசியும், இரயில் நண்பர்களும்!
வார இறுதியில், வீட்டை சுற்றி இருக்கும் சிறிய தோட்டங்களை சுத்தம் செய்து, அவற்றை மகிழ்ச்சியாக இருக்க வைப்பது... மதிய இடைவெளியில் ஏதாவது டப்பிங் திரைப்படங்கள் பார்ப்பது, OTT யில் அந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள் பார்ப்பது, அவ்வப்போது பசங்க படிக்கும் பள்ளியில் ஆசிரியர் - பெற்றோர் கலந்துரையாடலில் கலந்து கொள்வது, நண்பர்கள் வீட்டிற்கு செல்வது...
அப்புறம், கிடைக்கும் சிறு சிறு விடுமுறைகளில் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துச் செல்வது.. அங்கு சில நாட்கள் தங்கி விட்டு, மீண்டும் செட்டில் ஆன ஊரை நோக்கி விரைவது...
சந்திக்கும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று, புன்னகையை பரிசாக பெற்றது.. என சிறப்பாகவே சென்றது 2025...
இவ்வளவு தான் வாழ்க்கை... இதனை ரொம்ப எளிதாக கடந்து விடலாம் என எண்ணிய பல கோடி மக்களில் நானும் ஒருவன்!
ஆனால், வாழ்க்கை அவ்வளவு எளிதன்று...
நமது "உடல்நலம்" மேற்கூறிய அனைத்திற்கும் மேலானது...
நமது முன்னோர்கள் சொன்னது போல, சுவரின்றி சித்திரம் வரைய முடியாது அல்லவா...
ஒரு நாள், அந்த ஒரு நாள்,
எனது உடலில் அரிதான நோயொன்று இருப்பதை அறிந்து கொண்ட நாள்...
சிறிய.. இல்லை, சற்று பெரிதான சலனம்..
அன்று, அடுத்து என்ன செய்வது... மீதி இருக்கும் காலங்களை எவ்வாறு கடப்பது.. என்ற குழப்பங்களில் மூழ்கி கிடந்ததாக நினைவு...
ஆனால், எனது ஆழ் மனதில் பதிந்த/ பதித்த ஒரு வாசகம்...
"இதுவும் கடந்து போகும்" - This too shall pass
என்னை சற்று விழித்துக் கொள்ள வைத்தது...
மருத்துவ ஆலோசனையை பெற்றோம்.. இன்னும் ஆறு மாதங்கள் இவ்வாறு தான் இருக்கும்.. மருத்துவம் இப்படித்தான் இருக்கும்.. என முழு விபரங்களைப் பெற்றோம். பிறகென்ன, அந்த கடினமான பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.. ஒவ்வொரு வாரங்களையும், ஒவ்வொரு சகாப்தங்களாக கடந்தோம்...
ஆம், அதுவும், எதுவும் எளிதன்று...
உள்மனதில் நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருந்தோம்... அப்படியே, ஆறு மாதங்களும் கடந்தன..
இன்று, வருட இறுதியில் இந்த பதிவை இடும் அளவிற்கு மீண்டு வநது விட்டேன் என்ற மகிழ்ச்சியை பகிர்வதா?
இல்லை, வாழ்வில் எதையும் கடந்து விடலாம் என நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு முதலில் சொல்லி விடலாமா?
இல்லை, வரும் ஆண்டில் எதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என அழுத்தமாக சொல்லலாமா?
சந்தேகமின்றி, நமது உடல்நலம் நோக்கி தான் பயணிக்க வேண்டும்...
மேலும், நமது ஆழ் மனதில் கீழ்கண்ட வாசகத்தையும் புதைத்துக் கொண்டு, 2026-ஆம் ஆண்டினை வரவேற்கலாமா?,
"நல்லா இருப்போம் நல்லா இருப்போம்,
எல்லோரும் நல்லா இருப்போம்"
-----------------------------------------------
வரவேற்போம், ஆங்கில புத்தாண்டினை நலமுடன்!
ஆம் எனில், எளிதாக கடந்து விடலாம் வளமுடன்!
வாழ்க நலமுடன்!
----------------------------------------------
என்றும் அன்புடன்
- தெய்வா