நல்ல விஷயம்.
ஆனா இது படிக்க (
அநேகமா நீங்க ஒரு 15
மணித்துளிகள் செலவிட வேண்டி இருக்கும்.. ) மட்டும் இல்ல.. . ...
இந்தியன் திரைப்படம் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் பார்த்திருப்போம். அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சத்தையும் மெத்தனப் போக்கையும் திரையில் பதிவு செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஒன்று.
லஞ்சத்தின் பரவலைக் காட்டுவதற்காக இயக்குநர் எடுத்துக்கொண்ட களம் - வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். மிகச்சரியான தேர்வு.உங்களுக்கு "எட்டு" போடத் தெரியுமோ இல்லையோ, அரசு இயந்திரத்துக்கு நீங்கள் கட்டாயம் "துட்டு" போட்டாக வேண்டும். காற்றைப் போல கையூட்டு முழுமையும் பரவியிருக்கும் இடம் அது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவை நம்ம ஊர் தாசில்தார் அலுவலகங்கள். மற்ற இடங்களில் எல்லாம் மேசைக்கடியில் இருக்கும் லஞ்சம், இங்கு மட்டும் சர்வ சுதந்திரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும். கிராமங்களே இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கும் இந்தக் காலங்களில் கூட எந்த ஒரு சான்றிதழுக்கும், கிராம அலுவலரின் கையொப்பம் அவசியமாக இருக்கிறது. அதன்பின் வருவாய் அலுவலர், கடைசியில் தாசில்தாரிடம் வருகையில் குறைந்தபட்சம் இருநூறு ரூபாய்கள் "அழ" வேண்டியிருந்திருக்கும். பணம் வாங்குவது மட்டுமல்ல, அவர்களின் அதிகாரத் தோரணையும், நடந்து கொள்ளும் விதமும் முகம் சுழிக்க வைப்பன.
இவையெல்லாம் என் நேரடி அனுபவங்களே! சென்ற முறை இந்தியா சென்ற போது, புதிதாக வாங்கிய வீட்டிற்கு சில வேலைகளுக்காக தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. அதிகபட்சம் அரைமணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய வேலைக்கு கிட்டத்தட்ட ஒரு முழுநாள் ஆகியது. லஞ்சத்தைத் தாண்டியும் என்னை மிகவும் காயப்படுத்திய விஷயம் இது. ஒரு கடைநிலை ஊழியர்கூட நான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும், ஆதிசேஷன் பூமியைச் சுமப்பதைப் போலத் தான் மட்டுமே இந்த மொத்த அரசாங்கத்தையும் தலையில் சுமப்பதாக எண்ணம்.
இந்த "பேசா மடந்தைகளை"ப் பேசவைக்க ஒரு வழி பிறக்காதா? என அடிக்கடி நினைப்பதுண்டு. சென்ற மாதம் தினமலரில் படித்த செய்தி சந்தோசத்தையும், ஆச்சரியத்தையும் ஒருசேரக் கொடுத்ததோடல்லாமல் நான் தேடிய வழி பிறந்ததையும் சொன்னது.
செய்தி இது தான்.
"கோவில்பட்டியில் ஒரு சமூக சேவகர், காவல்துறை உதவியுடன் தாசில்தார் அலுவலகக் கோப்புகளை ஆய்வு செய்திருக்கிறார். பணத்தைக் கண்டால் மட்டுமே வாயைத் திறக்கும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் முதல்முறையாக ஒரு சாதாரணக் குடிமகனின் கேள்விகளுக்கு முக்கியமாக
பணம் வாங்காமல் பதில் சொல்லியிருக்கிறார்கள்"
நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. எப்படி இது சாத்தியப்பட்டது ? அன்று அப்பர் சுவாமிகள் பதிகம் பாடி ஊமைகளைப் பேச வைத்தாரெனில், இன்று இவர்கள் பேசியது ஒரு சட்டத்தின் காரணமாக....
அதுவே "தகவல் பெறும் உரிமைச் சட்டம்"
வாக்குச்சீட்டினைப் போலவே, இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வலிமையான ஆயுதமிது, அலாவுதீன் பூதத்தைப் போல நீங்கள் கேட்பவற்றையெல்லாம் (தகவல்கள் மட்டும் !!! ) தரக் கூடியது.
தகவல் உரிமை பெறும் சட்டமானது, 15.06.2005 அன்று குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்று 22.10.2005 முதல் அமலாக்கப்பட்டது. நம் தமிழகத்தில் 1997ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி முதலே இச்சட்டம் நடைமுறையிலிருந்தாலும், மத்திய அரசு மூலம் அக்டோபர் 2005 முதல் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாடு முழுதும் "
கட்டாயமாக" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் நோக்கமே, அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்திறனிலும் வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடைமையை மேம்படுத்துதல், அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வழி செய்வதே ஆகும்.
இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் பாதிக்கும் விஷயங்களைத் தவிர அரசு சார்ந்த எந்தவொரு தகவலையும் நாம் கேட்டுப் பெற முடியும். இதற்கென மத்திய, மாநில, மாவட்ட அளவில் தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்தியிலும், மாநில அளவிலும் தகவல் ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தத் தகவல் ஆணையங்கள், தேர்தல் ஆணையங்களுக்கு இணையான அதிகாரம் கொண்டவை. தமிழகத் தகவல் ஆணையம், ஒரு தலைமை ஆணையரையும், நான்கு மாநில தகவல் ஆணையர்களையும் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது.
தகவல் உரிமைச்சட்டம் பிரிவு 6ன்படி, நீங்கள் ஏதேனும் தகவல் பெற விரும்பினால் ஆங்கிலம் அல்லது தமிழில் எழுத்து வடிவிலோ, அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன் இன்றைய கட்டணமாக ரூபாய் 10 மட்டும் பணமாகவோ, வரைவோலையாகவோ (DD) அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் நீங்கள் பெற விரும்பும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் அத்தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்கும் உரிமை பொது தகவல் அலுவலர்க்குக் கிடையாது. நீங்கள் பெற விரும்பும் தகவல் இன்னொரு அரசு அலுவலகம் சார்ந்தது எனில், தகவல் அலுவலரே உங்களது விண்ணப்பத்தை உரிய இடத்திற்கு அனுப்பி வைப்பார். இது ஐந்து நாட்களுக்குள் செய்யப்படும்.
விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலர் நீங்கள் பெற விரும்பிய தகவல்களை அளிப்பார். 30 நாட்களுக்குள் தகவல் தரப்படா விட்டால், மேல்முறையீடு செய்யலாம். இதற்குத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாநிலத் தகவல் ஆணையத்திடம், முதல் மேல் முறையீடு 30 நாட்களுக்குள்ளும், இரண்டாம் முறையீடு முதல் முறையீட்டின் முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள்ளும் செய்ய உரிமை உண்டு. இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படி மேல் முறையீடு செய்யப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும். பிரிவு 20ன் படி, பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுப்பாரெனில், தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ 250/- அபராதமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த அபராதத் தொகையானது ரூ. 25000/- க்கு மிகாமல் இருக்கும். மேலும் பொதுத் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைக்கும்.
நீங்கள் பெற விரும்பும் தகவல் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் உட்பட தகவல் உரிமை சட்டம் பிரிவு 8 மற்றும் 9 களில் விலக்களிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றியெனில் உங்கள் விண்ணப்பம் தகுந்த காரணங்களை விளக்கி நிராகரிக்கப்படும். இவை தவிர அரசு ஆணை (GO) எண்கள் 1042, 1043, 1044, மற்றும் 1045 களின் படி, குற்றப்புலனாய்வுத்துறை, தனிப்பிரிவு, பாதுகாப்புப்பிரிவு உட்பட 30 அரசு அலுவலகங்களை, தகவல் உரிமைச் சட்டம் மூலமாக, தகவல் பெற அணுக முடியாது.
மக்களாட்சியில் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள வழி செய்யும் தகவல் உரிமைச் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.
இச்சட்டம் பற்றி மேலும் அறிய, தமிழக அரசு வெளியிட்டுள்ள
தகவல் கையேட்டினைப் படித்துப் பாருங்கள்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375,
முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை,
அண்ணாசாலை ,
சென்னை- 18.
தொலைபேசி எண் 044-24357580
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன்
2 வது தளம், பி-பிரிவு.
நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056
தொலைபேசி எண்கள் 011-26717353, 26761137
எல்லாம் சரி, இப்பொழுது உங்கள் மனதில் நிழலாடும் சந்தேகங்கள் எனக்குப் புரிகிறது. அதெப்படி இத்தனை முக்கியமான சட்டத்தினை, நம்மை ஆளுபவர்கள் தாமாக முன்வந்து அமுல்படுத்தினார்கள் ? மக்களை வெறும் ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மட்டுமே பார்க்கும், அவர்களை அதே நிலையில் வைத்திருக்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு இந்த யோசனை எப்படி வந்திருக்கும் ?
உங்கள் சந்தேகங்கள் மிகச் சரியானவையே. உங்களுக்குத் தெரியுமா? இன்று நடைமுறையில் இருக்கும் தகவல் உரிமைச் சட்டம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகால போராட்ட வரலாறு கொண்டது.
நிச்சயம் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
தரக்குறிப்பு: ( References)1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 வழிகாட்டி கையேடு. தமிழக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை வெளியீடு.
மேல் குறிப்பிட்ட தகவல் சுட்ட இடம் : (என் நண்பன் தர்மராஜ்-டம் இருந்து சுட்டது.)
http://thisaikalaithedi.blogspot.com/